search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2021-ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்புவோம்: இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேட்டி
    X

    2021-ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்புவோம்: இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேட்டி

    ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மனிதர்களுடன் விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. #ISRO #KSivan
    ஸ்ரீஹரிகோட்டா :

    பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் மூலம் பூமியை கண்காணிக்கும் ‘எச்.ஒய்.எஸ்.ஐ.எஸ்.’ என்ற செயற்கைகோள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 30 செயற்கைகோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணுக்கு நேற்று செலுத்தியது. இதனை தொடர்ந்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இஸ்ரோ தலைவர் கே.சிவன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் வெற்றிகரமாக தீர்மானிக்கப்பட்ட சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ராக்கெட் மூலம் ‘எச்.ஒய்.எஸ்.ஐ.எஸ்.’ செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வணிக ரீதியாக விண்ணுக்கு அனுப்பப்பட்ட 30 செயற்கைகோள்கள், வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தபட்டுள்ளன. ‘எச்.ஒய்.எஸ்.ஐ.எஸ்.’ செயற்கைகோள், சண்டிகாரில் உள்ள ஆய்வு கூடத்தில் தயாரிக்கப்பட்டது. பூமி ஆய்வுக்காக மட்டுமே அனுப்பப்பட்டு உள்ளது.

    இந்த செயற்கைகோளில் அதிநவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் புவிப்பரப்பின் மீது உள்ள பொருட்களை மிகத் துல்லியமாக அடையாளம் காண்பது இந்த செயற்கைகோளின் முதன்மை நோக்கமாகும். இந்த செயற்கை கோள் விவசாய மேம்பாட்டுக்கு முழுமையாக பயன்படுத்த முடியும்.

    தொடர்ந்து, பிரெஞ்சு கயானாவில் இருந்து டிசம்பர் 5-ந்தேதி அதிக எடை கொண்ட ஜிசாட்-11 என்ற செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது. பொதுவாக ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் 4 டன் வரையிலான செயற்கைகோள்களை மட்டுமே செலுத்தும் திறன் கொண்டது. ஆனால் ஜிசாட்-11 5.86 டன் எடை கொண்டது. அதனால் இந்த செயற்கைகோளை இங்கிருந்து விண்ணில் அனுப்ப இயலாது என்பதால் பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏவப்படுகிறது.



    அதைத்தொடர்ந்து, 20 நாள்களில் ஜி.எஸ்.எல்.வி. ஜிசாட்-7ஏ செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும். தொடர்ந்து, அடுத்த ஆண்டு சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படுகிறது.

    இஸ்ரோ இதுவரை 20 நாடுகளை சேர்ந்த 270 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. இது உலக அளவில் இஸ்ரோவுக்கு நன்மதிப்பை பெற்று தந்துள்ளது. புவி வட்டப்பாதையில் இப்போது இஸ்ரோவின் 47 செயற்கைகோள்கள் தகவல் தொடர்புகள், புவி கண்காணிப்பு, அறிவியல் ஆய்வுகள், கடல்சார் ஆய்வுகள் போன்ற பயன்பாட்டுக்காக செயல்பட்டு வருகின்றன.

    ‘ககன்யான்’ விண்கலம் விண்ணுக்கு அனுப்புவதற்கான பணிகள் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. ககன்யானுக்கு முன்னதாக ஆளில்லாத முதலாவது விண்கலம் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. தொடர்ந்து மேலும் ஒரு விண்கலம் 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் செலுத்தப்படுகிறது.

    அதனை தொடர்ந்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மனிதர்கள் செல்லும் விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.

    தொடர்ந்து அடுத்த ஆண்டு, 12 முதல் 14 செயற்கைகோள் அதாவது 15 நாட்களுக்கு ஒரு ராக்கெட் வீதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. விண்வெளி என்கிற சொத்தை இஸ்ரோ திறமையாக கையாண்டு தொலை உணர்வு (ரிமோட் சென்சிங்) சேவையை நாட்டுக்கு வழங்கி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #ISRO #KSivan
    Next Story
    ×