என் மலர்
செய்திகள்

திருப்பதி மலைப்பாதையில் பாறையில் பஸ் மோதி 10 பேர் காயம்
திருமலை:
திருப்பதியில் இருந்து பயணிகள், பக்தர்களை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று 2-வது மலைப்பாதை வழியாக திருமலையை நோக்கி வந்து கொண்டிருந்தது.
மோகாலிமிட்டா என்ற இடத்தில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய பஸ், திடீரென மலைப்பாதை ஓரம் இருந்த பாறை மீது பயங்கரமாக மோதியது.
பஸ்சில் பயணம் செய்த பயணிகளும், பக்தர்களும் கூச்சலிட்டு அலறினர். டிரைவர் மற்றும் பயணிகள், பக்தர்கள் என 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. டிரைவர், தனது இருக்கையில் இருந்து எழ முடியாமல் அவதிப்பட்டார். பஸ்சில் பயணம் செய்த பயணிகள், பக்தர்கள் விரைந்து செயல்பட்டு இருக்கையில் அமர்ந்திருந்த டிரைவரை மெதுவாக மீட்டு பஸ்சில் இருந்து கீழே இறக்கினர்.
இந்த விபத்து பற்றி திருமலை போக்குவரத்துப் பிரிவு போலீசாருக்கும், திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அதிகாரிகளும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்த பயணிகள், பக்தர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ருயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து பற்றி திருமலை போக்குவரத்துப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #accident






