search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாஜ்மகாலுக்குள் தினமும் தொழுகை நடத்த தடை- அமலுக்கு வந்தது தீர்ப்பு
    X

    தாஜ்மகாலுக்குள் தினமும் தொழுகை நடத்த தடை- அமலுக்கு வந்தது தீர்ப்பு

    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலுக்குள் தினமும் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டதால் தொல்லியல் துறை அதிகாரிகள் பூட்டு போட்டனர். #TajMahal

    ஆக்ரா:

    உலக அதிசயங்களில் ஒன்றான ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்ப்பதற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தாஜ்மகாலை வெள்ளிக்கிழமை மட்டும் சுற்றி பார்க்க இயலாது. அன்று பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளிக்கிழமை தோறும் ஆக்ராவில் உள்ள உள்ளூர் முஸ்லிம்கள் மட்டும் கட்டணமின்றி தாஜ்மகாலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அன்று மதியம் அவர்கள் தொழுகை நடத்துவார்கள்.

    மற்ற நாட்களில் அதாவது சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 6 நாட்களும் கட்டணம் செலுத்தி உள்ளே செல்லும் மற்ற ஊர் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் தாஜ்மகாலில் தினமும் மதியம் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் வெளிநாடு முஸ்லிம்களும் தாஜ்மகாலுக்குள் தொழுகை நடத்துவது தெரியவந்தது. இது தாஜ்மகாலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக புகார்கள் எழுந்தன.

    இந்த நிலையில் இது குறித்து ஆக்ரா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த ஆக்ரா மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட்டு, வெள்ளிக்கிழமைகளில் வெளியூர் முஸ்லிம்கள் தாஜ்மகாலுக்குள் சென்று தொழுகை செய்ய தடை விதித்தது.

    இந்த சர்ச்சை சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில், “தாஜ்மகாலில் வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் தொழுகை நடத்த தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் தாஜ்மகாலுக்குள் வெள்ளிக்கிழமை நடக்கும் தொழுகையில் உள்ளூர் மக்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டுள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சமீபத்தில் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் தாஜ்மகாலுக்குள் தினமும் தொழுகை நடத்துவதற்கு தடை விதிக்கும் நடவடிக்கையை நேற்று முதல் தொல்லியல் துறையினர் தொடங்கி உள்ளனர்.

    நேற்று உள்ளூர் மற்றும் வெளியூர் முஸ்லிம்கள் ஏராளமானவர்கள் தாஜ்மகாலுக்குள் தொழுகை நடத்த முயன்றனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    வழக்கமாக தாஜ்மகாலுக்குள் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் பகுதியை தொல்லியல் துறை அதிகாரிகள் பூட்டு போட்டு பூட்டி விட்டனர். தாஜ்மகால் வளாகத்துக்குள் எந்த இடத்திலும் தொழுகை நடத்தக் கூடாது என்று அனுமதி மறுத்தனர்.

    வெளி ஊர்களில் இருந்து தாஜ்மகாலுக்கு வந்திருந்த முஸ்லிம் சுற்றுலா பயணிகளுக்கு இது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்தது. தொல்லியல் துறை நடவடிக்கைக்கு இமாம் சையது சாதிக் அலி, தாஜ்மகால் தொழுகை கமிட்டி தலைவர் சையது இப்ராகிம் உசைன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ஆனால் தொல்லியல் துறையினர் அதை ஏற்க வில்லை. சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவதாக கூறியுள்ளனர். #TajMahal 

    Next Story
    ×