search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்க ஏற்பாடு: அக்டோபர் 18-ந்தேதி முதல் தரிசிக்கலாம்
    X

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்க ஏற்பாடு: அக்டோபர் 18-ந்தேதி முதல் தரிசிக்கலாம்

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிப்பது பற்றி வருகிற 3-ந்தேதி திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆலோசனை நடத்த உள்ளது. #Sabarimala #SabarimalaVerdict #SC
    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் நித்திய பிரம்மச்சாரி கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். எனவே இக்கோவிலுக்குள் நுழைய ஆண்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

    பெண்களில் 10 வயதிற்கு மேல் 50 வயதிற்குட்பட்டவர்கள் யாரும் இக்கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று இளம் வக்கீல்கள் சங்கம் உள்பட பல்வேறு மகளிர் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இந்திய இளம் வக்கீல் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விரிவான மனுத்தாக்கல் செய்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு, கேரள அரசு, மகளிர் அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் கேட்கப்பட்டது.


    இதற்கான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று வழங்கியது. இதில், இடம் பெற்ற 4 நீதிபதிகள் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று தீர்ப்பு கூறினர்.

    பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். பெரும்பான்மை நீதிபதிகள் ஒரே தீர்ப்பை வழங்கியதால் சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது.

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பு வெளியானதும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது ஆகம விதிகளுக்கு முரணாக அமையும் என்று கூறினர். கோவிலின் தந்திரி கண்டரரு ராஜீவரரு, பந்தளம் ராஜ குடும்பத்தினரும் தீர்ப்பு ஆகம விதிகளுக்கு முரணானது என்றனர்.

    அதே நேரம் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் இதுபற்றி கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம். அதனை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்றார்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு திருவிழாக்கள் மிகவும் பிரசித்திப் பெற்றவை.

    மண்டல பூஜைக்கான விழா தொடங்க இன்னும் 45 நாட்கள் உள்ளன. அதற்கு முன்பு வருகிற 17-ந்தேதி மாலை 5 மணிக்கு ஐப்பசி மாத பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படும். 18-ந்தேதி அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    அப்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிப்பது பற்றி ஆலோசிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு திட்டமிட்டுள்ளது. இதற்காக வருகிற 3-ந்தேதி அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    சபரிமலையில் இதுவரை பெண்கள் அனுமதிக்கப்பட்டதில்லை என்பதால் அங்கு பெண்களுக்கான எந்த அடிப்படை வசதியும் இல்லை. சபரிமலை வரும் பெண்கள் பம்பையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு விடுவார்கள்.

    பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானம் வரை பெண்களுக்கான கழிப்பறைகளோ, தங்கும் அறைகளோ, தரிசன கியூவரிசையோ கிடையாது. இனி சபரிமலைக்கு வரும் பெண்களுக்காக அடிப்படை வசதிகள் அனைத்தையும் புதியதாக உருவாக்க வேண்டும்.

    முதலில் தனி கழிப்பறைகள், கியூ வசதி, தங்கும் அறைகள் ஆகியவற்றை அமைக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்காக பெண் போலீசார் நியமிக்கப்பட வேண்டும்.

    சபரிமலைக்கு வரும் பக்தர்களில் விரதம் இருந்து இருமுடி கட்டி வருபவர்களே 18 படிகள் ஏற வேண்டும் என்ற ஐதீகம் உள்ளது.


    இந்த நிலையில் 18-ம் படி ஏற ஆண், பெண் இருவரையும் எப்படி அனுமதிப்பது என்பதை முடிவு செய்யவேண்டும். 18-ம் படியின் அகலம் ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த படியில் ஒரு நிமிடத்திற்கு 36 முதல் 50 பக்தர்கள் ஏறிச் செல்வார்கள்.

    மண்டல பூஜை, மகர விளக்கு நாட்களில் இந்த எண்ணிக்கை நிமிடத்திற்கு அதிகபட்சம் 92 பேராக உயர்த்தப்படும். அதற்கு மேல் பக்தர்களை அனுமதிக்க முடியாது. இனி பெண்களும் 18-ம் படி ஏற வரும்போது, அவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பை அளிப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும்.

    சபரிமலை கோவில் தற்போது 59 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. இனி பெண்களும் வந்தால் இப்போது இருக்கும் இட வசதியை அதிகரிக்க வேண்டும். குடிநீர் வசதி, பம்பை ஆற்றில் பெண்கள் குளிக்க தனி ஏற்பாடு போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

    இதற்கு இப்போது இருக்கும் இடத்தை காட்டிலும் கூடுதலாக 250 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்று தேவசம் போர்டு கருதுகிறது. இந்த நிலத்தை சபரிமலை வனப்பகுதியில் இருந்துதான் எடுக்க வேண்டும்.

    இந்த மலைப்பகுதி பெரியார் புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அவர்களிடம் இருந்து வனப்பகுதியை பெற அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்.

    திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு முன்னால் உள்ள இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்ட பின்பே பெண்கள் சபரிமலைக்கு சுதந்திரமாக வந்து செல்ல முடியும்.

    இதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொண்டு வருவதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். வருகிற 3-ந்தேதி நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு தெரியவரும். #Sabarimala #SabarimalaVerdict #SC
    Next Story
    ×