search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2022-ம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரம் இரு மடங்காக உயரும் - பிரதமர் மோடி சொல்கிறார்
    X

    2022-ம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரம் இரு மடங்காக உயரும் - பிரதமர் மோடி சொல்கிறார்

    இந்திய பொருளாதாரம் 2022-ம் ஆண்டுக்குள் இரு மடங்காக, 5 லட்சம் கோடி டாலர் அளவுக்கு உயரும் என பிரதமர் மோடி கூறினார். #IndianEconomy #NarendraModi #IICC #Delhi
    புதுடெல்லி:

    டெல்லியில் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டி பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், “இந்திய பொருளாதாரம் 8 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சி அடையும். இதனால் தகவல் தொழில் நுட்பம் மற்றும் சில்லரை விற்பனை துறையில் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும். நாட்டின் பெரும்பொருளாதார அடிப்படை, நல்ல வலுவாக உள்ளது” என்று கூறினார்.

    தொடர்ந்து அவர் பேசும்போது, “2022-ம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரம் இரு மடங்காக, 5 லட்சம் கோடி அமெரிக்க டாலராக உயரும். இதில் உற்பத்தித்துறையும், விவசாயத்துறையும் தலா 1 லட்சம் கோடி டாலர் என்ற அளவை எட்டும்” என்றும் குறிப்பிட்டார்.



    மேலும், “இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்து ஊக்குவித்ததின் காரணமாக இப்போது நாட்டில் உபயோகத்தில் உள்ள 80 சதவீத செல்போன்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாக அமைந்துள்ளன.

    இது ரூ.3 லட்சம் கோடி அன்னிய செலாவணியை மிச்சப்படுத்த உதவியாக அமைந்தது. மத்திய அரசு, தைரியமான முடிவுகளை எடுக்கிற துணிச்சலைக் கொண்டுள்ளது” எனவும் மோடி கூறினார்.

    இந்த விழாவில் மோடி பேசும்போது, நாட்டின் 3-வது பெரிய வங்கியாக உருவாகிற வகையில் தேனா வங்கி, விஜயா வங்கி, பரோடா வங்கி ஆகிய 3 வங்கிகளை ஒரே வங்கியாக இணைக்கிற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருப்பதை சுட்டிக்காட்டினார். சரக்கு மற்றும் சேவை வரிகள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

    இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி தவுலா குவான் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகேயுள்ள துவாரகாவுக்கு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். 14 நிமிட பயணத்துக்கு பின்னர் அவர் துவாரகா சென்றடைந்தார். விழா முடிந்த பின்னரும் அவர் மெட்ரோ ரெயிலில் திரும்பினார்.

    பிரதமர் மோடி, டெல்லியில் மெட்ரோ ரெயில் பயணம் மேற்கொள்வது ஒன்றும் புதிது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. #IndianEconomy #NarendraModi #IICC #Delhi
    Next Story
    ×