search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக சார்பில் போட்டியிடும் தவறை மோகன்லால் செய்யமாட்டார் - ரமேஷ் சென்னிதலா
    X

    பாஜக சார்பில் போட்டியிடும் தவறை மோகன்லால் செய்யமாட்டார் - ரமேஷ் சென்னிதலா

    நடிகர் மோகன்லால் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக தேர்தலில் போட்டியிடும் தவறை செய்யமாட்டார் என காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார். #Mohanlal
    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால். மோகன்லால் தனது பெற்றோர் நினைவாக விஸ்வசாந்தி பவுண்டேசன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு சார்பில் நடைபெறும் பணிகளுக்கு ஆதரவு தர கேட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.

    அப்போது பிரதமர் மோடி, நடிகர் மோகன்லாலின் செயல்பாடுகளை பாராட்டியதோடு, அவரது அமைப்புக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறினார்.

    இந்த தகவலை பிரதமர் மோடியும், நடிகர் மோகன்லாலும் டுவிட்டரில் பதிவிட்டனர். பிரதமர் மோடி டுவிட்டரில் மோகன்லாலை வெகுவாக பாராட்டி கருத்து பதிவிட்டிருந்தார். மோகன்லாலும் பிரதமருடான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியை அளித்ததாக கூறி இருந்தார்.


    பிரதமர் மோடியை மோகன்லால் சந்தித்து பேசியது பற்றி தகவல் வெளியானதை தொடர்ந்து அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேரப் போவதாக தகவல்கள் வெளியானது. மேலும் அடுத்து வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளராக மோகன்லால் நிறுத்தப்படுவார் என்றும் கூறப்பட்டது.

    இதுபற்றி நடிகர் மோகன்லாலிடம் நிருபர்கள் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    நான் எனது வேலையை செய்து கொண்டிருக்கிறேன். வருகிற பாராளுமன்ற தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடப் போவதாக வெளியான தகவல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இப்போது நான் இது பற்றி எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மோகன்லால் பற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்கட்சி தலைவருமான ரமேஷ் சென்னிதலா கூறியதாவது:-

    கேரளாவில் ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகர் மோகன்லால் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக தேர்தலில் போட்டியிடும் தவறை செய்யமாட்டார். அவர் ஒரு போதும் இது போன்ற தவறை செய்யமாட்டார் என்று நான் நம்புகிறேன்.

    மோகன்லால் ஒரு பிரபல நடிகர். அவரை பலரும் நேசிக்கிறார்கள். அவர் முட்டாள் தனமான முடிவை எடுக்க மாட்டார் என்று நினைக்கிறேன், என்றார்.

    உடனே நிருபர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேருபவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று கூறுகிறீர்களா? என்று கேட்டனர். அதற்கு ரமேஷ் சென்னிதலா, தனது பேச்சை திரித்து கூறுவதாக தெரிவித்தார். #RameshChennithala #Mohanlal
    Next Story
    ×