search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடியின் ஆதரவு நிறுவனங்கள் ரூ.29 ஆயிரம் கோடி நிலக்கரி ஊழல் - காங்கிரஸ் குற்றச்சாட்டு
    X

    மோடியின் ஆதரவு நிறுவனங்கள் ரூ.29 ஆயிரம் கோடி நிலக்கரி ஊழல் - காங்கிரஸ் குற்றச்சாட்டு

    பிரதமர் மோடியின் ஆதரவு நிறுவனங்கள் ரூ.29 ஆயிரம் கோடி நிலக்கரி ஊழலில் ஈடுபட்டு இருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது. #Coalscam #Congress #PMModi

    புதுடெல்லி:

    மத்திய பாரதிய ஜனதா ஆட்சி ரபேல் போர்விமான கொள்முதலில் ஊழலில் ஈடுபட்டு இருப்பதாக காங்கிரஸ் ஏற்கனவே குற்றம் சாட்டி வருகிறது.

    இந்த நிலையில் பிரதமர் மோடியின் ஆதரவு நிறுவனங்கள் நிலக்கரி ஊழலில் ஈடுபட்டு இருப்பதாக இப்போது புதிய குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

    இந்த குற்றச்சாட்டை முன்னாள் மத்திய மந்திரி ஜெயராம் ரமேஷ் கூறி உள்ளார். அவர் இதுபற்றி கூறியதாவது:-

    நிலக்கரியை அதிக அளவில் பயன்படுத்தும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட 40 நிறுவனங்கள் இந்தோனேசியா நாட்டில் இருந்து நிலக்கரிகளை இறக்குமதி செய்துள்ளன.

    ஆனால், இதில் போலி பில்களை மத்திய வருவாய் துறைக்கு வழங்கி ஊழலில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு ரூ.29 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.

    இது சம்பந்தமாக மத்திய நிதித்துறையின் பிரிவான வருவாய் புலனாய்வுதுறை அந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இந்த முறைகேட்டில் பிரதமர் மோடிக்கு மிக நெருங்கிய நிறுவனமான அதானி குரூப் நிறுவனங்கள், அனில் அம்பானி நிறுவனங்கள், எஸ்ஸார் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. இதில், சுமார் 70 சதவீத நிலக்கரி அதானி நிறுவனங்களுக்கு வந்துள்ளன.


    பிரதமர் மோடி, தான் ஊழல் அற்ற வெளிப்படையான நிர்வாகத்தை நடத்தி வருவதாக கூறி இருக்கிறார்.

    ஆனால், நிலக்கரி ஊழல், போர் விமான ஊழல், குஜராத் பெட்ரோலிய கார்ப்பரேசன் ஊழல் என தொடர்ந்து நடந்துள்ளன.

    இது சம்பந்தமாக பல்வேறு ஆதாரங்கள் இருந்தும் பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இவ்வாறு ஜெயராம் ரமேஷ் கூறினார்.

    ஆனால், நிலக்கரி முறைகேடு காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் தான் நடந்துள்ளது. 2006-ம் ஆண்டு தொடங்கி சுமார் 5 அல்லது 6 ஆண்டுகள் வரை இறக்குமதி நடந்துள்ளது. இதில்தான் ஊழல் நடந்ததாக ஜெயராம் ரமேஷ் குற்றம்சாட்டி இருக்கிறார்.

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தானே இந்த ஊழல் நடந்துள்ளது? என்று ஜெயராம் ரமேசிடம் கேட்டதற்கு, “எந்த ஆட்சி காலம் என்றாலும் ஊழல் ஊழல்தான். இந்த முறைகேடு தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி எவ்வாறு நடந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

    ஏற்கனவே வருவாய் புலனாய்வு பிரிவு இது பற்றி விசாரணை தொடங்கி உள்ளது. சட்டம் தனது கடமையை செய்ய வேண்டும்” என்று கூறினார்.

    இந்த முறைகேடு தொடர்பாக அதானி நிறுவன செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். அதில் அதானி நிறுவனம் எந்தவிதமான முறைகேடுகளிலும் ஈடுபட வில்லை.


    ஆனால், இந்த விவகாரம் தற்போது கோர்ட்டில் உள்ளது. எனவே, நாங்கள் மேற்கொண்டு எந்த கருத்தையும் கூற முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

    அதானி குரூப் நிறுவன ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்று வருவாய் புலனாய்வு பிரிவு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், இதை எதிர்த்து அதானி நிறுவனம் மும்மை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இதையடுத்து வருவாய் புலனாய்வு பிரிவினர் அதானி குரூப்பின் ஆவணங்களை ஆய்வு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதானி நிறுவனம் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனம் மூலம் நிலக்கரிகளை இறக்குமதி செய்து இருக்கிறது. அதில் தான் முறைகேடுகள் நடந்து இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் பாரதிய ஜனதா அரசு மீது பல்வேறு ஊழல் புகார்களை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. அதில், நிலக்கரி ஊழலும் முக்கியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Coalscam #Congress #PMModi

    Next Story
    ×