என் மலர்
செய்திகள்

குஜராத்தில் விசித்திரம்: கணித தேர்வில் 50க்கு 80 மதிப்பெண் வழங்கி அசத்திய ஆசிரியர்கள்
குஜராத் மாநிலத்தின் கல்வி வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில், 50 மதிப்பெண் கொண்ட தேர்விற்கு, 80 மதிப்பெண் வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #ExamMarks
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் கல்வி வாரியத்தால் இந்த ஆண்டின் முற்பகுதியில் பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. கணித தேர்வுக்கு மொத்த மதிப்பெண்களே 50 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாணவர் ஒருவர் கணிதத் தேர்வில் 80 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தாலும், கூடுதல் மதிப்பெண் கிடைத்ததற்காக மகிழ்ந்தார்.
இதற்கிடையே, இதுகுறித்து ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தும்படி மாநில கல்வித்துறை உத்தரவிட்டது. விசாரணையில், அந்த மாணவனுக்கு தவறுதலாக 80 மதிப்பெண் வழங்கப்பட்டது தெரிய வந்தது. உண்மையில், அந்த மாணவர் பெற்றது வெறும் 8 மதிப்பெண் மட்டுமே.
இதேபோல், 12-ம் வகுப்பு தேர்வுகளின் போதும் தவறான பதிலுக்கு கூடுதலாக மதிப்பெண் வழங்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.
ஆசிரியர்களின் இத்தகைய செய்கையால் மாநில கல்வி வாரியம் எரிச்சல் அடைந்துள்ளது. 10 மற்றும் 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தலில், இதுபோன்ற குளறுபடிகளை செய்தது தொடர்பாக 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
ஏற்கனவே, கடந்த ஜூன் மாதம் தேர்வுக்கே வராத 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கிய பீகார் கல்வித்துறை மாணவர்கள், பெற்றோரின் அதிருப்திக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது. #ExamMarks
Next Story






