search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்தியபிரதேச தேர்தல் - முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் 12-ந்தேதி வெளியிடுகிறது
    X

    மத்தியபிரதேச தேர்தல் - முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் 12-ந்தேதி வெளியிடுகிறது

    மத்தியபிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் 12-ந்தேதி வெளியிடுகிறது. #MadhyaPradeshelection #Congress

    போபால்:

    மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிஜோரம் ஆகிய 4 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்த தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன.

    மத்தியபிரதேச மாநிலத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக பாரதிய ஜனதா ஆட்சியில் உள்ளது. அங்கு எப்படியாவது காங்கிரசை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்று அந்த கட்சி தீவிர பணிகளை செய்து வருகிறது.

    இதுதொடர்பாக மாநில தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கமல்நாத் கூறியதாவது:-

    மத்தியபிரதேசத்தில் நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர் பார்க்கிறோம். நாங்கள் தேர்தல் பிரசாரத்தை செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் தொடங்க இருக்கிறோம். அதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை.


    ராகுல்காந்தி வருகிற 17-ந்தேதி போபால் வருகிறார். அப்போது அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளிலும் யாரை வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டும் என்பது பற்றி ஆய்வு நடத்தி உள்ளோம்.

    ஒவ்வொரு தொகுதியிலும் காங்கிரசில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ள நபர்கள் யார்? என்பது பற்றி தனியார் நிறுவனம் மூலம் கருத்து கணிப்பு நடத்தி வருகிறோம். செப்டம்பர் 4-ந்தேதி இதன் அறிக்கை எங்களிடம் தரப்படும்.

    முதலாவதாக கட்சி பலவீனமாக உள்ள 80 தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்து முதலில் அறிவிக்க இருக்கிறோம். அங்கு யாரை நிறுத்துவது என்பது பற்றி விரைவில் இறுதி முடிவு எடுத்துவிடுவோம்.

    அதன்பிறகு செப்டம்பர் 12-ந்தேதி முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் 80 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயரும் அறிவிக்கப்படும்.

    வெற்றி பெற வாய்ப்பு உள்ள வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பல்வேறு பிரச்சினைகளை ஆய்வு செய்ய வேண்டியது உள்ளது. ஜாதி மற்றும் பல்வேறு சூழ்நிலைகளையும் மையமாக கொண்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

    மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி, கோண்டுவானா கன்தந்ர கட்சி, ஆகியவற்றுடன் கூட்டணி அமைப்பது பற்றியும் ஆலோசனை நடத்தி வருகிறோம். 3 நாட்களுக்கு முன்பு நான் டெல்லி சென்றிருந்தபோது பகுஜன் சமாஜ் கூட்டணி பற்றி ஆலோசித்தேன். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    விரைவில் தேர்தல் அறிக்கையை இறுதி செய்ய உள்ளோம். எங்களால் செய்யக்கூடிய திட்டங்களை அறிவிப்பாக வெளியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×