search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களின் நலனுக்கு தனி அமைச்சகம் - கேரளாவில் ராகுல் உறுதி
    X

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களின் நலனுக்கு தனி அமைச்சகம் - கேரளாவில் ராகுல் உறுதி

    கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை இன்று பார்வையிட்ட ராகுல் காந்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மீனவர்களின் நலனுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என தெரிவித்தார். #KeralaFloods #RahulGandhi
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 11 நாட்கள் பெய்த பேய் மழை காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசு அமைத்து இருந்த மீட்பு குழுக்கள் மற்றும் இராணுவ படையினர் மிகவும் கடுமையாக போராடினர்.

    இந்த போராட்டத்தில், கேரள மீனவர்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு. தங்களது படகுகள் போன்ற பல்வேறு வழிகளில் மீனவர்கள் தங்களது மிகச்சிறந்த பங்களிப்பை அளித்தனர். இதையடுத்து கேரளாவில் மழை ஓய்ந்துள்ள நிலையில், தற்போது வெள்ளச் சேதங்களை சீரமைக்கும் பணியில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    இந்நிலையில், கேரள மழை வெள்ள சேதங்களை பார்வையிட இன்று கேரளா வந்தடைந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் செங்கனூர் பகுதிக்கு சென்றார். அங்குள்ள ஒரு முகாமுக்கு நேரில் சென்ற ராகுல் காந்தி, அங்கு தங்கியிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    பின்னர், ஆலப்புழா மாவட்டத்துக்கு வந்த ராகுல்காந்தி, கேரள வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்ற தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது உதவிய மீனவர்களுக்கு கேடயங்களை வழங்கி, வாழ்த்து கூறி கவுரவித்தார்.

    அங்கு திரளாக கூடியிருந்த மீனவ மக்களிடையே பேசிய ராகுல் காந்தி, வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், விவசாயிகளுக்கு உள்ளதுபோல் மீனவர்களின் நலனுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என உறுதி அளித்தார்.

    போலி வாக்குறுதியாக இதை கூறவில்லை. எவ்வித பாதுகாப்பும் அளிக்கப்படாத மீனவ மக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் இதை நான் தெரிவித்து கொள்கிறேன் என்றும் ராகுல் குறிப்பிட்டார்.

    எண்ணிக்கையில் குறைவான சுமார் 3 ஆயிரம் மீனவ மக்கள் மாநிலம் முழுவதும் 70 ஆயிரம் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டதை பெருமையாக குறிப்பிட்ட அவர், ஒக்கி புயல் பாதிப்பின்போது அனைத்தையும் இழந்துநின்ற மீனவ மக்களுக்கு போதுமான உதவிகளை அரசு செய்து தராதது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார். #KeralaFloods #RahulGandhi 
    Next Story
    ×