search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் - பாஜக யாத்திரை பிரசாரத்தை அமித் ஷா தொடங்கி வைத்தார்
    X

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் - பாஜக யாத்திரை பிரசாரத்தை அமித் ஷா தொடங்கி வைத்தார்

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாஜக யாத்திரை பிரசாரத்தை தேசிய தலைவர் அமித்ஷா தொடங்கி வைத்தார். #AmitShah

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடை பெற உள்ளது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த 3 மாநில தேர்தல்கள் ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்பதால் 3 மாநில சட்டசபை தேர்தல் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ராஜஸ்தானில் வசுந்தர ராஜேசிந்தியா தலைமையிலும், மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலும், சத்தீஸ்கரில் ராமன்சிங் தலைமையிலும் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு தேர்தலில் இந்த 3 மாநிலங்களிலும் பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று இருந்தது.

    மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பா.ஜ.க. 165-ல் வெற்றி பெற்று இருந்தது. ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 இடங்களில் 163 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியது. சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 90 இடங்களில் 50 இடங்களை பா.ஜ.க. பெற்று இருந்தது.

    இந்த நிலையில் 3 மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. ஆனால் ஆட்சியை மீண்டும் தக்க வைத்து கொள்ள பா.ஜ.க. தலைவர்கள் வியூகம் வகுத்துள்ளனர்.

    பாரதிய ஜனதா கட்சி 3 மாநிலங்களிலும் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டது. ராஜஸ்தானில் இன்று அதிகாரப்பூர்வமாக ராஜஸ்தான் கவுரவ யாத்ரா என்ற பெயரில் பிரசார யாத்திரையை அம்மாநில முதல்-மந்திரி வசுந்திரராஜே சிந்தியா தொடங்கி உள்ளார்.

    58 நாட்களுக்கு சுமார் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணம் செய்யும் வகையில் இந்த யாத்திரை வடிவமைக்கப்பட்டுள்ளது. 165 தொகுதிகளை தொடும் வகையில் யாத்திரை செல்ல உள்ளது.

    செப்டம்பர் மாதம் 30-ந்தேதி இந்த யாத்திரை நிறைவடையும். இந்த யாத்திரையில் வசுந்திரராஜே சிந்தியாவுடன் ராஜஸ்தான் உள்துறை மந்திரி குலோப் சந்த் கட்டாரியா, அசோக் பர்னமி எம்.எல்.ஏ. ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

    இன்று காலை ராஜ்சம்மந்த் என்ற இடத்தில் உள்ள சர்புஜா கோவிலில் இந்த யாத்திரையை பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்த யாத்திரையின்போது 135 பொதுக்கூட்டங்களில் வசுந்திரராஜே சிந்தியா பேச உள்ளார்.

    500 இடங்களில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர். மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 180 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் இந்த யாத்திரையை பா.ஜ.க. தொடங்கி உள்ளது.

    பா.ஜ.க. பிரசாரத்தை தீவிரப்படுத்தி இருப்பதை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் ராஜஸ்தான் செல்ல உள்ளார். இந்த மாத இறுதியில் அவர் அந்த மாநிலத்தில் சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். முதல் கட்ட பயணத்தின்போது 3 கோவில்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நத்வாரா என்னும் இடத்தில் ஸ்ரீநாத்ஜி எனும் கோவில் சிகார் எனும் இடத்தில் உள்ள கதுசியாம்ஜி கோவில் ஜெய்ப்பூரில் உள்ள கோவிந்த் தேவ்ஜி ஆகிய 3 கோவில்களுக்கும் முதலில் ராகுல் சென்று வழிபாடு செய்து விட்டு பிரசாரத்தை செய்ய உள்ளார்.

    குஜராத் மற்றும் கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தல்களின் போது ராகுல் அதிகமான இந்து கோவில்களுக்கு சென்று வழிபட்டார். பா.ஜ.க. தலைவர்களுக்கு போட்டியாக அவர் கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    அவரது ஆலய பிரசாரத்துக்கு ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது. எனவே இந்துக்களின் ஓட்டுகளை குறி வைத்து அவர் ராஜஸ்தானிலும் இந்து ஆலயங்களுக்கு அதிகளவில் செல்ல முடிவு செய்துள்ளார்.

    ராகுலை எந்தெந்த இந்து ஆலயங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற பட்டியலை ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின்பைலட் தயாரித்து வருகிறார்.

    Next Story
    ×