என் மலர்
செய்திகள்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சுப்ரிம் கோர்ட் நீதிபதியாக நியமனம்
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கும் இந்திரா பானர்ஜியை, சுப்ரிம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் அனுப்பிய பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. #IndiraBanerjee #SupremeCourt
புதுடெல்லி :
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒரிசா ஐகோர்ட் தலைமை நீதிபதி வினீர் சரண் ஆகியோருடன் உத்ரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் பெயரை மீண்டும் கொலிஜியம் மத்திய அரசுக்கு சமீபத்தில் பரிந்துரை செய்தது. கொலிஜியத்தின் பரிந்துரை அனைத்தையும் மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கான உத்தரவு திங்கட்கிழமை பிறப்பிக்கப்படும் என தெரிகிறது. புதிதாக நியமிக்கப்பட்டவர்களோடு சேர்த்து சுப்ரிம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இந்திரா பானர்ஜி நியமனத்தால் சுப்ரிம் கோர்ட்டில் உள்ள பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே பானுமதி மற்றும் இந்து மல்கோத்ரா ஆகிய பெண் நீதிபதிகள் சுப்ரிம் கோர்ட் நீதிபதிகளாக பதவி வகிக்கின்றனர். எனினும், 6 நீதிபதிகள் பணியிடங்கள் அங்கு இன்னும் காலியாக உள்ளன.
கடந்த 2002-ம் ஆண்டு கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இந்திரா பானர்ஜி, பின்னர் டெல்லி ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, கடந்த 2017-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #IndiraBanerjee #SupremeCourt
Next Story