search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
    X

    புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

    புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. #PuducherryNominatedMLAs
    புதுடெல்லி:

    புதுவை சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் பாரதிய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நேரடியாக நியமித்தது. சபாநாயகர் இதனை ஏற்க மறுத்து, பதவிப்பிரமாணம் செய்யாததால், அவர்களுக்கு கவர்னர் கிரண்பேடியே பதவி பிரமாணமும் செய்து வைத்தார்.

    ஆனால், நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்க சபாநாயகர் வைத்திலிங்கம் மறுத்து வருகிறார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும் என தீர்ப்பு அளித்தது.

    சென்னை ஐகோர்ட் வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்காமல், இறுதி விசாரணையை ஜூலை 19-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மேலும், நியமன எம்எல்ஏக்கள் மூன்று பேரும் சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்கலாம் என்றும் உத்தரவிட்டு, வழக்கை மூன்று வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால், பட்ஜெட் தொடரில் பங்கேற்பதற்காக 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் புதுவை சட்டசபைக்கு சென்றனர். ஆனால், அவர்களை சபை காவலர்கள் சட்டசபை வளாகத்துக்குள் அனுமதிக்க மறுத்து விட்டனர். இப்போது சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருப்பதால், 3 எம்எல்ஏக்களையும் சபைக்குள் அனுமதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. #PuducherryNominatedMLAs
    Next Story
    ×