என் மலர்
செய்திகள்

நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கும்படி தெலுங்கு தேசம் எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு
மத்திய அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கும்படி தெலுங்கு தேசம் எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுடெல்லி :
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று, மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. தெலுங்குதேசம் சார்பிலும் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
இதனை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு அனுமதி அளித்துள்ளார். இந்த மசோதா மீதான விவாதம் வரும் 20-ம் தேதி காலை 11 மணிக்கு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மத்திய அரசு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.க்களுக்கு அக்கட்சியின் மாநிலங்களவை கொறடா கே.நாராயன ராவ் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-
தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் அனைவரும் இன்று மற்றும் நாளை நடைபெறும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் தவறாமல் பங்கேற்க வேண்டும். அப்போது, மத்திய அமைச்சரவைக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எம்.பி.க்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story