என் மலர்
செய்திகள்

டெல்லியில் ஆட்சி அதிகாரம் யாருக்கு? -தீராத சர்ச்சைக்கு ராஜ்நாத் சிங்கை நாடும் கெஜ்ரிவால்
டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கிய நிலையிலும், கவர்னர் முட்டுக்கட்டை போட்டுள்ளதால், ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் ஆட்சி அதிகாரம் யாருக்கு என்ற வழக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் எனவும், அமைச்சரவையின் ஆலோசனைப்படியே கவர்னர் செயல்பட வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு சமீபத்தில் உத்தரவிட்டது.
நிலம், சட்டம் ஒழுங்கு துறைகள் தவிர மற்ற துறைகளில் செயல்திட்டங்களுக்கு கவர்னரின் ஒப்புதல் தேவையில்லை எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பால் உற்சாகம் அடைந்த டெல்லி ஆம் ஆத்மி அரசு கவர்னர் முட்டுக்கட்டை போட்ட திட்டங்களை செயல்படுத்தும் முனைப்பில் உள்ளது.
இதற்கிடையே, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று துணை நிலை கவர்னர் அஜய் பைஜ்வாலை சந்தித்து பேசினார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால் கூறுகையில், துணை நிலை கவர்னர் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் அனைத்து அம்சங்களையும் ஏற்றுக்கொண்டதாக கூறினார்.
ஆனால், கவர்னரின் கையில் அதிகாரம் இருப்பதாக 2015-ம் ஆண்டு உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டி, உள்துறை அமைச்சகத்தின் அறிவுரையின் பெயரிலேயே தான் செயல்பட முடியும் என அஜய் பைஜ்வால் கூறியதாக கெஜ்ரிவால் தெரிவித்தார்.
சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு 2015 அறிவிக்கையை ரத்து செய்ததாகவே அர்த்தம் என எடுத்துக்கூறியும் கவர்னர் ஏற்க மறுக்கிறார் என கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், மேற்கண்ட சர்ச்சைகளுக்கு முடிவு கட்டும் வண்ணம் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து விவாதிக்க அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். இதற்காக, ராஜ்நாத் சிங்கை சந்திக்க கெஜ்ரிவால் நேரம் கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Next Story






