search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் எய்ம்ஸ் - அறிவிப்பு மட்டுமே நிதி ஒதுக்கவில்லை என ஆர்.டி.ஐ மூலம் தகவல்
    X

    மதுரையில் எய்ம்ஸ் - அறிவிப்பு மட்டுமே நிதி ஒதுக்கவில்லை என ஆர்.டி.ஐ மூலம் தகவல்

    பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்னர் அறிவிக்கப்பட்ட 13 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் எந்த திட்டமும் முடிக்கப்படவில்லை எனவும், 5 மருத்துவமனை அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கவே இல்லை என்றும் ஆர்.டி.ஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது. #AIIMS
    புதுடெல்லி:

    பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2014-ம் ஆண்டு மத்தியில ஆட்சிக்கு வந்தது. அதன்பின்னர் 13 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2014-15, 2015-16 மற்றும் 2017-18 மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. இதில் எந்த ஒரு திட்டமும் முடிவடையும் வகையில் இல்லை என்றே தெரிகிறது. 

    குறிப்பாக 5 மருத்துவமனை அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என்றும் ஆர்.டி.ஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. 

    இந்தியா டுடே செய்தி நிறுவனம் ஆர்.டி.ஐ. தகவல் மூலம் பெற்றுள்ள தகவலில், தமிழகத்தில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், மருத்துவமனையை கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மருத்துவமனையை கட்டிமுடிக்க அமைச்சரவையின் காலக்கெடு இறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது என தமிழக அரசின் சார்பில் 20-ம் தேதி தெரிவிக்கப்பட்டது. இந்தியா டுடே மத்திய அமைச்சகத்திடம் இருந்து பெற்ற ஆர்.டி.ஐ. பதிலில் 21-ம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது.


     
    இதேபோன்று பிற மாநிலங்களில் திட்டத்தை முன்னெடுக்க ஆகும் தொகை எவ்வளவு? வழங்கப்பட்டது என்பது தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரூ. 1000 கோடிக்கும் அதிகமான செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிக பட்சமாக ரூ. 278.42 கோடி மேற்கு வங்காளத்திற்கு மட்டும் வழங்கப்பட்டு உள்ளது.

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் கல்யாணியில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. ரூ. 1,754 கோடி செலவில் திட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது, ஆனால் ரூ. 278.42 கோடி மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனை 2020-ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. 

    ஆனால், இவ்விவகாரத்தில் பணிகள் துரிதமாக நடைபெற்றால் மட்டுமே திட்டமிட்டப்படி மருத்துவமனையை கட்டியமைக்க முடியும். இதேபோன்றுதான் பிற மாநிலங்களுக்கான அறிவிப்பும் உள்ளது. பீகார் மற்றும் குஜராத் மாநிலங்களில் மருத்துவமனை அமைவதற்கான இடம் தேர்வு செய்யப்படவில்லை எனவும் ஆர்.டி.ஐ. பதிலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×