search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணமதிப்பு நீக்க விவகாரம் - அமித்ஷாவை இயக்குனராக கொண்ட கூட்டுறவு வங்கி சர்ச்சையில் சிக்கியது
    X

    பணமதிப்பு நீக்க விவகாரம் - அமித்ஷாவை இயக்குனராக கொண்ட கூட்டுறவு வங்கி சர்ச்சையில் சிக்கியது

    அமித்ஷாவை இயக்குனராக கொண்ட கூட்டுறவு வங்கி, பணமதிப்பு நீக்கம் அமலில் இருந்தபோது, ரூ.745 கோடி செல்லாத நோட்டுகளை பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. #AmitShah #BannedNotes
    மும்பை:

    கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அந்த நோட்டுகளை நவம்பர் 10-ந் தேதி முதல், டிசம்பர் 30-ந் தேதிவரை வங்கி கணக்கில் செலுத்தலாம் என்று கூறினார்.

    முதலில், மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் இந்த நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கருப்பு பணம் போடப்படும் என்ற சந்தேகத்தால், 5 நாட்களில், அதாவது நவம்பர் 14-ந் தேதியுடன் இந்த அனுமதி நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே, பணமதிப்பு நீக்க காலத்தின்போது, பொதுத்துறை வங்கி, மாநில கூட்டுறவு வங்கி, மாவட்ட கூட்டுறவு வங்கி என ஒவ்வொரு வங்கியிலும் எவ்வளவு செல்லாத நோட்டுகள் பெறப்பட்டன என்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மும்பையைச் சேர்ந்த மனோரஞ்சன் ராய் என்பவர் கேள்வி கேட்டு இருந்தார். அதற்கு ‘நபார்டு’ வங்கியின் தலைமை பொது மேலாளரும், மேல்முறையீட்டு ஆணையருமான எஸ்.சரவணவேல் பதில் அளித்துள்ளார்.

    மொத்தம் உள்ள 21 பொதுத்துறை வங்கிகளில், 7 வங்கிகள் மட்டுமே இந்த விவரங்களை அளித்துள்ளன. 14 வங்கிகள் அவற்றை அளிக்க மறுத்து விட்டன. ஆனால், அனைத்து மாநில கூட்டுறவு வங்கிகளும், அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் விவரங்களை அளித்துள்ளன.

    அதன்படி, மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் அதிக அளவாக ரூ.745 கோடியே 59 லட்சம் செல்லாத நோட்டுகள் பெறப்பட்டுள்ளன. ஐந்தே நாட்களில் இந்த நோட்டுகள் வந்துள்ளன. இதன் இயக்குனராக இருப்பவர், பா.ஜனதா தலைவர் அமித்ஷா என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக அவர் அப்பொறுப்பில் இருந்து வருகிறார். 2000-ம் ஆண்டு, அவ்வங்கியின் தலைவராகவும் இருந்தார்.

    அந்த வங்கிக்கு பிறகு, அதிகமான செல்லாத நோட்டுகளை பெற்றது, ராஜ்கோட் மாவட்ட கூட்டுறவு வங்கி ஆகும். அது, ரூ.693 கோடியே 19 லட்சம் பெற்றுள்ளது. அதன் தலைவராக இருப்பவர், குஜராத் மாநில மந்திரி ஜெயேஷ்பாய் வித்தல்பாய் ராடாடியா.

    குஜராத் மாநில கூட்டுறவு வங்கியே வெறும் ரூ.1 கோடியே 11 லட்சம் செல்லாத நோட்டுகளை பெற்றிருக்கும்போது, மேற்கண்ட 2 மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் அதை விட பலமடங்கு அதிகமாக பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    தகவல் உரிமை சட்டத்தில் இந்த விவரங்களை பெற்ற மனோரஞ்சன் ராய் இதுகுறித்து கூறியதாவது:-

    மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட செல்லாத நோட்டுகளின் மதிப்பை பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது.

    7 பொதுத்துறை வங்கிகளில் ரூ.7 லட்சத்து 57 ஆயிரம் கோடியும், 32 மாநில கூட்டுறவு வங்கிகளில் ரூ.6 ஆயிரத்து 407 கோடியும் 370 மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ரூ.22 ஆயிரத்து 271 கோடியும், 39 தபால் நிலையங்களில் ரூ.4 ஆயிரத்து 408 கோடியும் செல்லாத நோட்டுகள் பெறப்பட்டுள்ளன.

    மேற்கண்ட வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மட்டும் மொத்தம் ரூ.7 லட்சத்து 91 ஆயிரம் கோடி செல்லாத நோட்டுகள் பெறப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்ட மொத்த செல்லாத நோட்டுகளே ரூ.15 லட்சத்து 28 ஆயிரம் கோடிதான். ஆனால், மேற்கண்ட வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மட்டும் 52 சதவீத செல்லாத நோட்டுகள் பெறப்பட்டுள்ளன.

    இதன்மூலம், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்கள் அளிக்காத 14 பொதுத்துறை வங்கிகள், ஊரக, நகர்ப்புற வங்கிகள், தனியார் வங்கிகள், உள்ளூர் கூட்டுறவு வங்கிகள், ஜனகல்யாண் வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கி உரிமம் பெற்ற நிறுவனங்கள் ஆகியவற்றில் எவ்வளவு செல்லாத நோட்டுகள் பெறப்பட்டு இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதில் இல்லாததால், பலத்த சந்தேகம் எழும்புகிறது.

    மேலும், கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் சமயத்தில், மாநில கூட்டுறவு வங்கிகளும், மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் தங்களிடம் உள்ள செல்லாத நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் செலுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இவ்வங்கிகளில் பெரும்பாலானவை, அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளவை.

    மாநில கூட்டுறவு வங்கிகளில் மராட்டிய மாநில கூட்டுறவு வங்கி அதிக அளவாக ரூ.1,128 கோடி செல்லாத நோட்டுகளை செலுத்தியது. வெறும் 4 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட அந்தமானில் உள்ள மாநில கூட்டுறவு வங்கி ரூ.85 கோடியே 76 லட்சம் செல்லாத நோட்டுகளை செலுத்தியது சந்தேகத்துக்குரியதாக உள்ளது.

    இவ்வாறு மனோரஞ்சன் ராய் கூறினார். 
    Next Story
    ×