search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித் ஷாவிடம் வருத்தம் தெரிவித்த லதா மங்கேஷ்கர்
    X

    அமித் ஷாவிடம் வருத்தம் தெரிவித்த லதா மங்கேஷ்கர்

    இந்தியாவின் நைட்டிங்கேல் என்று புகழப்படும் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவிடம் இன்று வருத்தம் தெரிவித்துள்ளார். #LataMangeshkarfoodpoisoning #AmitShah
    மும்பை:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த மாதம் 26ம் தேதியோடு 4 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்தது. இதையடுத்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை குறிவைத்து “ஆதரவுக்கான தொடர்பு” எனும் பிரச்சாரத்தை அக்கட்சி அறிமுகம் செய்தது. 

    இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம், கட்சியின் 4 ஆயிரம் நிர்வாகிகள், சுமார் ஒரு லட்சம் பேரை தொடர்புகொண்டு சந்தித்து மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கி கூறவேண்டும். பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா மட்டும் 50 பேரை தனியாக சந்தித்து பா.ஜ.க ஆட்சியின் சாதனைகளை விளக்கி கூறி அவர்களின் ஆதரவை கோர திட்டமிட்டுள்ளார்.

    அதனடிப்படையில், பதஞ்சலி நிறுவனதின் தலைவரும் யோகா துறையில் சிறப்பாக செயல்பட்டு வருபவருமான யோகா குரு பாபா ராம்தேவை அமித்ஷா நேற்று முன்தினம் புதுடெல்லியில் சந்தித்தார். அவரிடம் பா.ஜ.க அரசின் சாதனைகளை விளக்கி கூறி அவரின் ஆதரவையும் அமித்ஷா கோரியுள்ளார்.

    இந்நிலையில், இன்று மும்பை வந்த அமித்ஷா, இந்தியாவின் நைட்டிங்கேல் என்று புகழப்படும் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், நடிகை மாதுரி தீக்‌ஷித், தொழிலதிபர் ரத்தன் டாட்டா ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்ட திட்டமிட்டிருந்தார். 

    அவ்வகையில், இன்று நடிகை மாதுரி தீட்சித் மற்றும் ரத்தன் டாட்டாவை சந்தித்த அமித் ஷா பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் புத்தகத்தை பரிசளித்தார்.

    இதற்கிடையில், இன்று பிற்பகல் அமித் ஷாவை பாடகி லதா மங்கேஷ்கர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். தன்னை நேரில் சந்திக்க விரும்பியதற்காக அமித் ஷாவுக்கு அவர் நன்றி தெரிவித்தார். உணவு ஒவ்வாமை சார்ந்த கோளாறுகளால் தங்களை நேரில் சந்திக்க இயலாத அசவுகரியம் ஏற்பட்டு விட்டது. அடுத்தமுறை நீங்கள் மும்பை வரும்போது நாம் நிச்சயமாக சந்தித்துப் பேசலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பின்னர் தெற்கு மும்பையில் ரத்தன் டாட்டா வீட்டுக்கு சென்ற அமித் ஷா, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகள் தொடர்பாக சுமார் 30 நிமிடம் விளக்கம் அளித்தார்.

    முன்னாள் ராணுவ தளபதிகளான தல்பீர் சிங் சுஹாக் மற்றும் சுபாஷ் காஷ்யாப், இந்திய முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ் ஆகியோரை அமித்ஷா ஏற்கெனவே சந்தித்து அவர்களின் ஆதரவை கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது. #LataMangeshkarfoodpoisoning #AmitShah  
    Next Story
    ×