search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியை சந்தித்தார் கமல்ஹாசன்
    X

    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியை சந்தித்தார் கமல்ஹாசன்

    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியை இன்று சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களும் சுமுகமாக செயல்படுவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். #Kamalhaasan #Kumaraswamy
    பெங்களூர்:

    தமிழகம்-கர்நாடகம் இடையே 40 ஆண்டுகளாக காவிரி பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்ததால் இருமாநில நல்லுறவு பாதிக்கப்பட்டது.

    காவிரி பிரச்சினை எழும் போதெல்லாம் பெங்களூரில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதற்கு இரு மாநிலங்கள் இடையே நல்லிணக்கம் மற்றும் சுமூக நிலை இல்லாததே காரணம். இதற்கான முயற்சிகளில் எந்த அரசியல் தலைவர்களும் ஈடுபடவில்லை.



    இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியதும் நடிகர் கமல்ஹாசன் காவிரி பிரச்சினையில் இரு மாநிலங்களுக்கு இடையே கசப்புணர்வை தீர்க்க பாடுபடுவேன், கர்நாடக முதல்-மந்திரியை சந்தித்து பேசுவேன் என்று அறிவித்தார்.

    கர்நாடக முதல்-மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றபோது அந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

    சோனியா, ராகுல், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை அந்த நிகழ்ச்சியில் சந்தித்துப் பேசினார். முதல்-மந்திரி குமாரசாமியையும் தனியாக சந்தித்து பேசினார்.

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கமல்ஹாசனை வரவேற்று அவர் தோள் மீது கைபோட்டு பேசும் அளவுக்கு சகஜமாக பழகினார். கமல்ஹாசனின் இந்த சந்திப்பு தமிழர்-கன்னடர் உறவை மேம்படுத்துவதாக இருந்தது.

    இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியை மீண்டும் சந்திக்க கமல்ஹாசன் முடிவு செய்தார். சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கும்படி கடிதம் எழுதினார். அதை ஏற்று குமாரசாமி இன்று கமல்ஹாசனை சந்திப்பதாக பதில் அனுப்பினார்.

    இதை ஏற்று கமல்ஹாசன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் சென்றார். இரவு ஓட்டலில் தங்கினார்.

    இன்று அவர் பெங்களூரில் முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வமான கிருஷ்ணா இல்லம் சென்றார். அவரை குமாரசாமி வரவேற்று அழைத்துச் சென்றார். குமாரசாமிக்கு கமல்ஹாசன் பூங்கொத்து வழங்கினார். பதிலுக்கு குமாரசாமியும் பூங்கொத்து வழங்கினார்.

    குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்து இருப்பதை கர்நாடகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் வரவேற்றுள்ளன. #Kamalhaasan #Kumaraswamy


    Next Story
    ×