search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் வாலிபர் கவுரவ கொலை: குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு கைது
    X

    கேரளாவில் வாலிபர் கவுரவ கொலை: குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு கைது

    கேரளாவில் கவுரவ கொலையில் ஈடுபட்ட கொலையாளிகளுக்கு உடந்தையாக இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.#honourkilling #kerala #lovemarriage
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த கெவின் ஜோசப் என்ற தலித் வாலிபரும், அதே பகுதியைச் சேர்ந்த நீனு என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.

    இந்த காதலுக்கு நீனு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் எதிர்ப்பை மீறி கெவின் ஜோசப்-நீனு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த நீனுவின் குடும்பத்தினர் கூலிப்படை உதவியுடன் கெவின் ஜோசப்பை கடத்தி கொடூரமான முறையில் கொன்று அவரது பிணத்தை ஆற்றில் வீசினார்கள்.

    கேரளாவில் நடந்த இந்த கவுரவக்கொலை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளன.

    இந்த கொலைக்கு போலீசாரின் அலட்சியமும் ஒரு காரணம் என்று ஆரம்பத்திலிருந்து குற்றம் சுமத்தப்பட்டு வந்தது. கெவின் ஜோசப் கடத்தப்பட்டவுடன் அவரது மனைவி இதுபற்றி காந்தி நகர் போலீசில் புகார் செய்த போது அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சிபு, தற்போது முதலமைச்சரின் பாதுகாப்பு பணிக்காக செல்வதால் உடனடியாக இந்த புகார் பற்றி விசாரிக்க முடியாது என்று கூறி உள்ளார்.

    இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு அது உண்மை என்று தெரிய வந்ததால் அவரும் அதே போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பிஜு ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    மேலும் இந்த கொலையில் குற்றவாளிகளுக்கு காந்தி நகர் போலீசார் உடந்தையாக இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு பற்றி ஐ.ஜி. தலைமையில் விசாரணையும் நடத்தப்பட்டது. அதில், போலீசார் மீதான குற்றச்சாட்டில் உண்மை இருப்பது தெரிய வந்துள்ளது.



    இதை தொடர்ந்து காந்தி நகர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பிஜு மற்றும் இரவு பணியில் இருந்த ஏட்டு அஜய்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். உதவி சப்-இன்ஸ்பெக்டர் பிஜுவுடன் கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ள நீனுவின் சகோதரர் சானு சாக்கோ போனில் பேசியதற்கான ஆதாரமும் சிக்கி உள்ளது.

    இந்த கொலை வழக்கில் ஏற்கனவே நீனுவின் தந்தை சாக்கோ ஜாண், சகோதரர் சானு சாக்கோ உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் கூலிப்படையைச் சேர்ந்த நிஷாது (வயது 24), சிபின் (27), ஜெரோம் (24) ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார் உள்பட 3 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.#honourkilling #kerala #lovemarriage
    Next Story
    ×