search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரகப்பகுதிகளில் 815 மதுக்கடைகளை திறக்கலாம் - தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
    X

    ஊரகப்பகுதிகளில் 815 மதுக்கடைகளை திறக்கலாம் - தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

    ஊரகப்பகுதிகளில் 815 மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    புதுடெல்லி:

    தமிழக அரசு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து, மதுபானக்கடைகள் திறக்க தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், வழக்கறிஞர்களுக்கான சமூகநீதிப்பேரவையின் தலைவர் கே.பாலு மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கடந்த மாதம் 28-ந் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘முறையான அறிவிப்பு வெளியிடாமல், அந்த சாலைகளில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தால், அவற்றை உடனடியாக மூடவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய விடுமுறை அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆஜராகி, கடந்த 21-ந் தேதி தமிழக அரசு இது தொடர்பாக வெளியிட்ட அரசாணையின் நகலை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

    அதில் ‘சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் ஊரகப்பகுதிகளில் வரும் நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுக்கடைகள் ஒவ்வொன்றாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதன்படி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் 815 மதுபானக்கடைகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன’ என்று கூறப்பட்டு இருந்தது.

    இதற்கு மனுதாரர் கே.பாலு தரப்பில் ஆஜரான வக்கீல் பா.கருணாகரன் ஆட்சேபம் தெரிவித்தார். மே 21-ந் தேதி வெளியிட்ட அரசாணையை நேரடியாக கோர்ட்டில் தாக்கல் செய்து இருக்கிறார்கள். இதன் மீது பதில் தாக்கல் செய்ய எங்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும். தமிழக அரசு 815 மதுக்கடைகளை திறக்க அவசரம் காட்டுகிறது. கோடை விடுமுறைக்கு பிறகும் கூட இந்த வழக்கை ஒத்திவைக்கலாம் என்று கோரிக்கை விடுத்தார்.

    இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள், ‘சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு மே 14 மற்றும் இந்த ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களையும் கருத்தில்கொண்டு தமிழக அரசு மே 21-ந் தேதி வெளியிட்டுள்ள அரசாணை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதனை தமிழக அரசு செயல்படுத்தலாம். இந்த அரசாணை குறித்து எதிர்மனுதாரருக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் உரிய நீதிமன்றத்தை அணுகலாம்’ என்று உத்தரவு பிறப்பித்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவின் மூலம் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ரத்து ஆகிறது. இதனால் தமிழக அரசால் அடையாளம் காணப்பட்ட ஊரகப்பகுதிகளில் அமைந்துள்ள 815 மதுக்கடைகளை திறக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×