search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2019 பாராளுமன்ற தேர்தல்தான் ராகுலுக்கு முக்கிய பரீட்சை - முன்னாள் மத்திய மந்திரி
    X

    2019 பாராளுமன்ற தேர்தல்தான் ராகுலுக்கு முக்கிய பரீட்சை - முன்னாள் மத்திய மந்திரி

    2019 பாராளுமன்ற தேர்தல்தான் ராகுல்காந்திக்கு முக்கிய பரீட்சையாக அமையும் என்று முன்னாள் மத்திய மந்திரி அஸ்வனிகுமார் கூறியுள்ளார். #KarnatakaElection2018 #RahulGandhi #Parliamentelection

    புதுடெல்லி:

    ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவரானதற்கு பிறகு முதல் முறையாக சந்தித்த கர்நாடக தேர்தலில் அந்த கட்சி ஆட்சியை இழந்துள்ளது.

    இந்தியாவில் காங்கிரஸ் வலுவாக உள்ள மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று. அங்கு எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என காங்கிரஸ் கருதியது.

    அதற்காக முன்கூட்டியே பல்வேறு திட்டங்களை உருவாக்கி தேர்தல் பணிகளை தீவிரமாக செய்தனர். இருந்தும் காங்கிரஸ் தோல்வியை சந்தித்து இருக்கிறது.

    ராகுல்காந்தி தனது முதல் பரீட்சையிலேயே தோல்வி அடைந்து இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அஸ்வனிகுமார் கூறும் போது, கர்நாடகா தேர்தல் முடிவு ராகுலுக்கு விடப்பட்ட சவாலாக கருத முடியாது.

    அதேநேரத்தில் 2019 பாராளுமன்ற தேர்தல்தான் ராகுல்காந்திக்கு முக்கிய பரீட்சையாக அமையும். அந்த தேர்தலில் மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைத்து வெற்றி பெற முயற்சி மேற்கொள்ளப்படும்.

    கர்நாடக தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு முடிவுகள் வரவில்லை என்று கூறினார்.

    மேலும் கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் தொண்டர்களை வாக்குசாவடி அடிப்படையில் முழுமையாக பணியாற்றுவதற்கு ஏற்பாடு செய்யாததும், கட்சிக்குள் இருந்த கோஷ்டி பூசல்களை சரிசெய்யாததும்தான் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்று கட்சிக்குள்ளேயே சிலர் குற்றம்சாட்டுகிறார்கள்.

    அதாவது வாக்காளர்களின் மனநிலையை புரிந்து கொண்டு அதற்கு தகுந்த மாதிரி உரிய பணிகளை காங்கிரஸ் கட்சி செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

    லிங்காயத் சமூக விவகாரத்தில் காங்கிரஸ் எடுத்த முடிவு சரியானது அல்ல என்று பலரும் விமர் சிக்கிறார்கள். விரைவில் மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கர்நாடக தோல்வி காங்கிரசை பாதித்துள்ளது.

    கர்நாடக தேர்தலில் ராகுல்காந்தி மிகவும் தீவிரமாக பிரசாரம் செய்தார். 9 முறை அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வி‌ஷயத்தில் முதல்-மந்திரி சித்தராமையாவை தன்னிச்சையாக செயல்பட அனுமதி அளித்தார்.ஆனால், அது உரிய பலனை தரவில்லை.

    இது சம்பந்தமாக மூத்த தலைவர் ஒருவர் கூறும் போது, எங்களுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. தேர்தலில் சில இடங்கள் குறையும். ஆனாலும், தனிப் பெரும் கட்சியாக காங்கிரஸ் வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், அது நடக்கவில்லை என்று கூறினார்.

    கர்நாடக தேர்தலில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடந்த ஒரு ஆண்டுகளாகவே தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வந்தனர். இதற்கான பணிகளை கட்சி மேலிட பொறுப்பாளர் வேணுகோபாலிடம் ராகுல்காந்தி ஒப்படைத்து இருந்தார்.

    ‘பூத்’ கமிட்டி அமைப்பது, வாக்காளர்களிடம் அரசின் நலத்திட்டங்களை பற்றி விளக்குவது போன்ற பணிகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால், அது எடுபடவில்லை. #KarnatakaElection2018 #RahulGandhi #Parliamentelection

    Next Story
    ×