என் மலர்
செய்திகள்

பாஜகவை எதிர்ப்பதற்காக காங்கிரசுடன் கூட்டணி சேர தயாராக இருக்கிறோம் - தேவகவுடா
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் மே மாதம் 12-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. 224தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
வேட்பு மனுதாக்கல் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய ஏப்ரல் 24-ந் தேதி கடைசி நாளாகும். இந்த தேர்தலில் 4 கோடியே 96 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுபோட உள்ளனர்.
இந்த தேர்தலில் பாரதிய ஜனதா தனித்து போட்டியிடுகிறது. ஏற்கனவே பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பலர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.
காங்கிரசும் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 4 கட்டமாக கர்நாடக மாநிலத்தில் பிரசாரம் செய்தார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மைசூருவில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி மதசார்பற்ற ஜனதா தள தலைவர்களான முன்னாள் பிரதமர் தேவகவுடாவையும், அவரது மகன் குமாரசாமியையும் கடுமையாக விமர்சித்தார். பாரதிய ஜனதா கட்சியின் பி டீம்மாக மதசார்பற்ற ஜனதா தளம் செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார்.
ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் மட்டுமே கூட்டணி வைத்துள்ளது.
224 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், மீதமுள்ள தொகுதிகளில் மதசார்பற்ற ஜனதா தளம் போட்டியிடும் என்று அறிவித்துள்ளோம். ஆனால், காங்கிரஸ் கட்சி எங்களை பாரதிய ஜனதா கட்சியின் பி டீம் என்று விமர்சித்துள்ளது.
நாங்கள் பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்பதற்காக காங்கிரஸ் கூட்டணிக்கு தயாராக இருக்கிறோம். எங்களுக்கு எத்தனை இடங்களை காங்கிரஸ் ஒதுக்கும் என்று முதலில் அறிவிக்க வேண்டும். அதற்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதை நாங்கள் சொல்கிறோம்.
தேர்தலுக்கு பிறகு பகுஜன் சமாஜ் கட்சியை தவிர காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளமாட்டோம்.
இவ்வாறு தேவகவுடா கூறினார். #Devegowda #Karnatakaelection #tamilnews