என் மலர்
செய்திகள்

திருப்பதியில் ரூ.5 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: வக்கீல் உள்பட 2 பேர் கைது
திருப்பதி:
திருப்பதியில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக, திருப்பதி கிழக்குப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சுதாகர்ரெட்டி மேற்பார்வையில், திருப்பதி கிழக்குப் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபிரசாத் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரவீன்குமார், சேக்ஷாவலி ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் திருப்பதி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது திருப்பதி ராயலசெருவு சாலையில் பழனி தியேட்டர் அருகே உள்ள ஒரு வீட்டுக்குச் சென்ற போலீசார் அங்கு அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வீட்டில் ரூ.17 ஆயிரத்து 500-க்கு 5 மற்றும் 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் ரூ.2000 நோட்டுகள் 5 இருந்தது. வீட்டில் இருந்த ராமச்சந்திரா என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அவர், கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை மண்டலம் முத்திரைப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், திருப்பதியில் தங்கி கோர்ட்டில் பயிற்சி வக்கீலாக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. இவர், தங்கியிருந்த மற்றொரு வீடு திருப்பதி சென்னாரெட்டி காலனியில் உள்ளது. அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
அங்கு, ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் கள்ள ரூபாய் நோட்டுகளும், ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் ஒரிஜினல் ரூபாய் நோட்டுகளும் இருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். ராமச்சந்திரா திருப்பதியில் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றி வந்ததாக கூறினார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கள்ள ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இந்தக் கள்ள ரூபாய் நோட்டுகளை ராமச்சந்திராவுக்கு வினியோகம் செய்தவர், கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை மண்டலம் நூனிவாரிப்பள்ளியைச் சேர்ந்த நாகா.ஹரிபிரசாத் என்பது விசாரணையில் தெரிய வந்தது. கடப்பா மாவட்டம் சென்ற தனிப்படை போலீசார், அங்கு வைத்து நாகா.ஹரிபிரசாத்தை கைது செய்தனர். இவரிடம் ஒரிஜினல் ரூபாய் நோட்டுகள் ரூ.2 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2 பேருக்கும், கள்ள ரூபாய் நோட்டுகளை வினியோகம் செய்தது கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராமன், ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் கதிரியைச் சேர்ந்த கங்காதரம் என்பது தெரிய வந்தது.
இருவரையும், போலீசார் தேடி வருகின்றனர். இந்தக் கள்ள ரூபாய் நோட்டுகள் திருப்பதியில் 2 ஆண்டு களாக வினியோகம் செய்திருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த வழக்கு விசாரணையை திருப்பதி கிழக்குப் போலீசார், குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #tamilnews






