search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘யுக புருஷர் பாரத ரத்னா அடல் ஜி’: வாஜ்பாய் பற்றிய புத்தகத்தை துணை ஜனாதிபதி வெளியிட்டார்
    X

    ‘யுக புருஷர் பாரத ரத்னா அடல் ஜி’: வாஜ்பாய் பற்றிய புத்தகத்தை துணை ஜனாதிபதி வெளியிட்டார்

    ‘யுக புருஷர் பாரத ரத்னா அடல் ஜி’ நூல் வெளியீட்டு விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு நூலினை வெளியிட்டு வாழ்த்துரையாற்றினார். #vajpayee
    புதுடெல்லி:

    மத்தியப்பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரில் 25-12-1924 அன்று பிறந்த அடல் பிஹாரி வாஜ்பாய், வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து, இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டதற்காக 1942-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  அன்றுமுதல் தீவிரமாக தன்னை பொதுசேவையில் ஈடுபடுத்திக் கொண்ட அவர், 1957-ம் ஆண்டு பல்ராம்பூர் தொகுதியில் இருந்து முதன்முதலாக பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, எம்.பி. ஆனார்.

    அவரது பேச்சாற்றலை கண்டு வியப்படைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, 'என்றாவது ஒரு நாள் வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக வருவார்' என தெரிவித்ததாக கூறப்படுகிறது. 1970-ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை சட்டம் (மிசா) பிரகடனப்படுத்தப்பட்ட போது, அதனை எதிர்த்துப் போராடி, கைதாகி, சிறைச் சென்ற முக்கிய அரசியல் தலைவர்களில் வாஜ்பாயும் ஒருவர் ஆவார்.

    பின்னர், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உயர்ந்த வாஜ்பாயின் பெயர் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசியலோடு ஒன்றிணைந்த பெயராகவே மாறிப்போய் விட்டது.

    திருமணமே செய்து கொள்ளாமல் முழுநேர அரசியல்வாதியாக வாழ்ந்த அவர், இந்தியாவின் 10-வது பிரதமராக 16-5-1996 அன்று பதவி ஏற்றார். எனினும், பாராளுமன்றத்தில் போதுமான எம்.பி.க்களின் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் போனதை தொடர்ந்து 13 நாட்களிலேயே அவர் பதவி விலக நேர்ந்தது.

    பின்னர், 1998-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியதையடுத்து, இரண்டாவது முறையும் பிரதமராக அவர் பதவி ஏற்றார். தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் ஏற்பட்ட கருத்து மற்றும் கொள்கை முரண்பாடுகளின் விளைவாக இந்த முறையும் 13 மாதங்கள் மட்டுமே பிரதமராக அவர் பதவி வகிக்க முடிந்தது.

    அதன் பிறகு, அடுத்த ஓராண்டுக்குள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 1999-ல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 303 எம்.பி.க்.களுடன் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது. இதனையொட்டி, 13-10-1999 அன்று மூன்றாவது முறையாக அவர் இந்தியாவின் பிரதமர் ஆனார்.

    இம்முறை, முழுமையாக ஐந்தாண்டுகாலம் தனது பதவியை நிறைவுசெய்த வாஜ்பாய், பொக்ரான் அணுகுண்டு சோதனை, கார்கில் போர் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தி பாகிஸ்தானின் மூக்கை உடைத்தார். இதன் மூலம் இந்தியாவின் ஆற்றலையும், பெருமையையும் உலக நாடுகளுக்கு உணர்த்தினார்.

    நாட்டின் முக்கிய பெருநகரங்களை ஒன்றிணைக்கும் தங்க நாற்கர விரைவு நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக இந்தியாவின் உள்கட்டமைப்பையும் அவர் மேம்படுத்தினார். 6 முதல் 14 வயதுக்கிடைப்பட்ட பிள்ளைகளுக்கு இலவசமாக கட்டாய கல்வி அளிப்பதற்காக வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய ‘சர்வ சிக்‌ஷா அபியான்’ திட்டத்தின் மூலம் பள்ளி மாணவ - மாணவிகளின் இடைநிற்றல் 60 சதவீதம் அளவுக்கு குறைந்தது.

    தேர்ந்த அரசியல்வாதி, மிகச்சிறந்த நிர்வாகி என புகழப்படும் வாஜ்பாய் கவிதைகள் எழுதும் கலையிலும் கைதேர்ந்து விளங்கினார்.

    2004-ம் ஆண்டு தனது ஐந்தாண்டு கால பதவியை நிறைவு செய்த வாஜ்பாய், அரசியலில் இருந்து விலகுவதாக 2005-ல் அறிவித்தார். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பூரண ஓய்வில் இருக்கும் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு கடந்த 2015-ம் ஆண்டில் நாட்டிலேயே மிகவும் உயரியதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது.

    மரபுகளை எல்லாம் கடந்த வகையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் இல்லம் தேடிச்சென்று சிறப்புக்குரிய இந்த விருதினை அவருக்கு வழங்கினார்.

    கடந்த 25-ம் தேதி டெல்லியில் உள்ள இல்லத்தில் வாஜ்பாய் தனது 93-வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார். பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மற்றும் மத்திய மந்திரிகள் பலர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

    அவரது பிறந்த நாளை மத்திய அரசும் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் பல்வேறு மாநில அரசுகளும் நல்லாட்சி தினமாக கொண்டாடி மகிழ்கின்றன. அன்றைய தினம் சிறை கைதிகளின் தண்டனை குறைத்து விடுதலை செய்வது மற்றும் பல்வேறு நலதிட்டங்களை வழங்குவது போன்றவை நடைமுறையில் உள்ளது.

    இந்நிலையில், வாஜ்பாயின் அருமை, பெருமைகள் மற்றும் அவரது ஆட்சி முறையின் சிறப்புகள் தொடர்பாக பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ரமேஷ் பொக்ரியால் நிஷான்க் என்பவர் ‘யுக புருஷர் பாரத ரத்னா அடல் ஜி’ என்ற நூல் ஒன்றை இயற்றியுள்ளார்.



    இந்த நூல் வெளியீட்டு விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு நூலினை வெளியிட்டு வாஜ்பாயை பற்றிய பல சுவாரஸ்யமான நினைவுகளை குறிப்பிட்டு வாழ்த்துரையாற்றினார். #vajpayee
    Next Story
    ×