என் மலர்tooltip icon

    செய்திகள்

    காளஹஸ்தி அருகே 2 குழந்தைகளை குட்டையில் வீசி கொன்று, தாய் தற்கொலை
    X

    காளஹஸ்தி அருகே 2 குழந்தைகளை குட்டையில் வீசி கொன்று, தாய் தற்கொலை

    காளஹஸ்தி அருகே பெற்ற குழந்தைகளை குட்டையில் வீசி கொன்று விட்டு, பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது,
    ஸ்ரீகாளஹஸ்தி:

    சவுடேப்பள்ளி மண்டலம் செடுகுட்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓபுலப்பா. இவருடைய மகள் வசந்தா. இவருக்கும், நிம்மனப்பள்ளி மண்டலம் அக்ராகாரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான கங்காதரம் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 4 வயதில் அகில் என்ற மகனும், 3 வயதில் அர்சிதா என்ற மகளும் இருந்தனர். கங்காதரத்துக்கு பெற்றோர் இல்லாததால் அவர், திருமணம் ஆனதில் இருந்து மாமியார் வீட்டிலேயே தங்கி, கூலி வேலை பார்த்துக் கொண்டு குடும்பத்தை நடத்தி வருகிறார்.

    மகன் அகிலுக்கு பிறக்கும்போதே ஒரு காலும், கையும் செயல்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் சமீப காலமாக வசந்தாவுக்கும் நெஞ்சுவலி இருந்து வந்தது. அவர் திருப்பதி, மதனப்பள்ளி போன்ற அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை. இதனால், மனவேதனையில் இருந்து வந்தார். உடல் நலப்பாதிப்பால் வசந்தா பல முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    அதேபோல், நேற்று முன்தினம் தற்கொலை செய்வதற்காக வசந்தா தன்னுடைய வீட்டில் இருந்து கிராமத்துக்கு வெளியே ஓடி உள்ளார். அவரை பார்த்த கிராம மக்கள் பின்தொடர்ந்து சென்று, அவரை மீட்டு வந்து வீட்டில் விட்டுள்ளனர். கங்காதரம் தனது மனைவியை பெத்தப்பஞ்சாணி மண்டலம் ராயலபேட்டை கிராமத்துக்கு அழைத்துச் சென்று வேப்பில்லை மந்திரித்து வீட்டில் வைத்திருந்தார்.

    இந்தநிலையில் நேற்று வசந்தாவை சிகிச்சைக்காக திருப்பதிக்கு அழைத்துச் செல்ல, கணவர் கங்காதரம் தனக்கு தெரிந்த ஒருவரிடம் கடனாக பணம் வாங்கி வர வெளியே சென்று விட்டார். வீட்டில் இருந்த கங்காதரத்தின் பாட்டி குளிப்பதற்காக குளியல் அறைக்குச் சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்திக் கொண்ட வசந்தா, தன்னுடைய மகன், மகளை அழைத்துக் கொண்டு கிராமத்துக்கு அருகே சென்றுள்ளார்.

    ஜங்கம்வாணிகுண்டா அருகே தண்டசஞ்சீவினி என்ற நீர்நிறைந்த குட்டையில் முதலில் இரு குழந்தைகளை வீசி கொன்று விட்டு, அதே குட்டையில் வசந்தாவும் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். அந்த இடத்தில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து அவர்கள் 3 பேரை குட்டையில் இருந்து உயிரோடு மீட்க முயன்றனர். எனினும், வசந்தா மற்றும் இரு குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்து விட்டனர்.

    இதுபற்றி சவுடேப்பள்ளி போலீசுக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். புங்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரா, சவுடேப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வசந்தா மற்றும் இரு குழந்தைகளின் பிணங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக புங்கனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து சவுடேப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×