search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரட்டை இலை விவகாரம்: டெல்லி ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் மேல்முறையீடு
    X

    இரட்டை இலை விவகாரம்: டெல்லி ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் மேல்முறையீடு

    இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
    புதுடெல்லி:

    ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க. சசிகலா அணி என்றும் ஓ.பி.எஸ். அணி என்றும் இரண்டாக பிளவுபட்டது.

    கடந்த மார்ச் மாதம் ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட போது இரு அணியினரும் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கொண்டாடினார்கள். இதனால் இரட்டை இலை சின்னத்தை முடக்கி தேர்தல் கமி‌ஷன் நடவடிக்கை எடுத்தது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும் ஓ.பி.எஸ். அணியும் இணைந்தன. இதனால் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரும் போட்டி எடப்பாடி - ஓ.பி.எஸ். அணிக்கும் டி.டி.வி.தினகரன் அணிக்கும் இடையில் மாறியது.

    இரு தரப்பினரும் தலைமை தேர்தல் கமி‌ஷனில் தங்களுக்கு சாதகமான ஆவணங்களை தாக்கல் செய்தனர். அந்த ஆவணங்கள் மீது தேர்தல் ஆணைய அதிகாரிகள் 7 கட்ட விசாரணை நடத்தினார்கள். இரு தரப்பு வக்கீல்கள் ஆஜராகி இரட்டை இலை தங்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்று வாதாடினார்கள்.

    கடந்த 24-ந்தேதி இந்த வழக்கில் தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள் உத்தரவை வெளியிட்டனர். எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு “இரட்டை இலை” சின்னத்தை ஒதுக்கீடு செய்து அறிவித்தனர்.


    பாராளுமன்றம், சட்டசபை மற்றும் செயற்குழு- பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களை கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த தீர்ப்பு வழங்கப்படுவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்த தீர்ப்பை ஏற்க மறுத்துள்ள டி.டி.வி.தினகரன் அணியினர் தீர்ப்பை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்லப்போவதாக அறிவித்தனர்.

    அதன்படி இன்று  டி.டி.வி.தினகரன் அணியினர் மேல்முறையீடு செய்தனர். டெல்லி ஐகோர்ட்டில் இன்று காலை இதற்கான மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில் டி.டி.வி. தினகரன் கூறியிருப்பதாவது:-

    இரட்டை இலை சின்னம் தொடர்பாக நாங்கள் தாக்கல் செய்த ஆவணங்களை உரிய வகையில் தேர்தல் கமி‌ஷன் ஆய்வு செய்யவில்லை. எங்கள் கருத்துக்கள் ஏற்கப்படவில்லை.

    எனவே தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இரட்டை இலை சின்னத்தை எங்கள் அணிக்கு ஒதுக்கி தர உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

    டெல்லி ஐகோர்ட்டு இந்த வழக்கு விசாரணையை அவசரம் கருதி உடனே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி ‘இரட்டை இலை’ தொடர்பான விசாரணை நாளை நடைபெறும்” என்று அறிவித்தனர்.

    டெல்லி ஐகோர்ட்டில் தங்களுக்கு சாதகமான உத்தரவு கிடைக்காவிட்டால் சுப்ரீம் கோர்ட்டை அணுகவும் டி.டி.வி.தினகரன் தீர்மானித்துள்ளார்.

    முன்னதாக சுப்ரீம் கோர்ட்டில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக எந்த உத்தரவு பிறப்பிப்பதாக இருந்தாலும் தங்கள் கருத்தை கேட்காமல் வெளியிடக் கூடாது என்று ஓ.பி.எஸ். தரப்பினர் ஏற்கனவே கேவியட் மனுதாக்கல் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×