search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘இந்து தீவிரவாதம் ஆபத்தானது’ என்று கூறியவர் ராகுல் காந்தி: பா.ஜனதா குற்றச்சாட்டு
    X

    ‘இந்து தீவிரவாதம் ஆபத்தானது’ என்று கூறியவர் ராகுல் காந்தி: பா.ஜனதா குற்றச்சாட்டு

    லஸ்கர்-இ-தொய்பாவை விட இந்து தீவிரவாதம் ஆபத்தானது என்று அமெரிக்க தூதரிடம் கூறியவர் ராகுல் காந்தி. அவர் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பா.ஜனதா கேட்டுள்ளது.
    ஆமதாபாத்:

    பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய சட்ட மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் நேற்று குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மும்பை தாக்குதலுக்கு 2 ஆண்டுகள் கழித்து, 2010-ம் ஆண்டு, அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் இந்தியாவுக்கு வந்தார். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குடன் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.



    அதில், ராகுல் காந்திக்கு அருகில் அமெரிக்க தூதர் டைமோத்தி ரோமர் அமர்ந்து இருந்தார். அவர், ‘பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான லஸ்கர்-இ-தொய்பாவை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று ராகுலிடம் கேட்டார்.

    அதற்கு ராகுல் காந்தி, ‘லஸ்கர்-இ-தொய்பாவை விட இந்து தீவிரவாதம் ஆபத்தானது’ என்று கூறினார். இதை அமெரிக்க தூதர் தனது நாட்டுக்கு கடிதம் மூலம் தெரிவித்தார். அமெரிக்கா வசம் இருந்த இந்த கடிதத்தை ‘விக்கிலீக்ஸ்’ இணையதளம் வெளியிட, அதை உலகம் முழுவதும் பல பத்திரிகைகள் வெளியிட்டன.

    இந்து தீவிரவாதத்தை விட லஸ்கர்-இ-தொய்பா குறைவான ஆபத்து கொண்டது என்று கூறியதற்கு ராகுல் காந்தி வெட்கப்பட வேண்டும். இப்போது அவர் குஜராத்தில் கோவில் கோவிலாக சென்று வருகிறார்.

    மேலும், அப்போதைய குஜராத் முதல்-மந்திரி மோடி போன்ற பா.ஜனதா தலைவர்கள் பதற்றத்தை ஏற்படுத்தி வருவதாகவும் ராகுல் காந்தி கூறியதாக அமெரிக்க தூதர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். இவற்றுக்கெல்லாம் ராகுல் விளக்கம் அளிக்க வேண்டும்.

    கடந்த 2009-ம் ஆண்டு, பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கும் இடையே ஷார்ம்-எல்-ஷேக் நகரில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பிராந்திய விவகாரத்தில் இந்தியா தலையிடுவது கவலை அளிப்பதாக கிலானி கூறினார்.

    அவரது கவலையை ஏற்றுக்கொள்வதாக மன்மோகன் சிங் கூறினார். இது, அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் இடம்பெற்றுள்ளது. காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்டி வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக மன்மோகன் சிங் நடந்து கொண்டது, தேச பாதுகாப்பை விட்டு கொடுப்பதற்கு ஒப்பானது.

    இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
    Next Story
    ×