search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் 15 ஆயிரம் ஒப்பந்த ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம்: துணை முதல் மந்திரி அறிவிப்பு
    X

    டெல்லியில் 15 ஆயிரம் ஒப்பந்த ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம்: துணை முதல் மந்திரி அறிவிப்பு

    டெல்லி அரசில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்துவரும் சுமார் 15 ஆயிரம் ஒப்பந்த ஆசிரியர்களின் பணி நிரந்தரம் செய்யப்படும் என துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லி அரசில் கடந்த சில ஆண்டுகளாக கல்வி, பொதுப்பணித்துறை, சுகாதாரம், பெண்கள்–குழந்தைகள் மேம்பாடு துறைகளில் ஒப்பந்த ரீதியில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். இப்படி டாக்டர்கள், நர்சுகள், ஆசிரியர்கள், சுகாதார பணியாளர்கள் என சுமார் ஒருலட்சம் பேர் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    இதனையடுத்து, கடந்த டெல்லி சட்டசபை தேர்தலின்போது, ஒப்பந்த பணியாளர்கள் நீக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர்களின் பணி வரைமுறைப்படுத்தப்படும் என ஆம் ஆத்மி கட்சி தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இருப்பினும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.

    தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 3 மாநகராட்சிகளை சேர்ந்த ஒப்பந்த பணியாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். தங்களது வேலையை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா வீடுகளை முற்றுகையிட்டு ஒப்பந்த ஆசிரியர்கள் முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், டெல்லி அரசின் மந்திரிசபை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டெல்லி துணை முதல் மந்திரியும், கல்வித்துறை மந்திரியுமான மணிஷ் சிசோடியா கூறியதாவது:-

    டெல்லி அரசின் கல்விமுறை சீர்திருத்தத்தில் ஒப்பந்த ஆசிரியர்களின் பங்களிப்பு மகத்தானது. மாணவர்களுக்கு கற்பிக்க இவர்களுக்கு போதுமான திறமையும் அனுபவமும் உள்ளது. இவர்களுக்கு மாற்றாக புதிய ஆசிரியர்களை நியமனம் செய்தால் கல்விமுறைக்கு பெரிய பின்னடைவாக அமைந்துவிடும். மீண்டும் நாம் முதலில் இருந்து தொடங்க வேண்டியதாகிவிடும்.

    எனவே, டெல்லி அரசுக்குட்பட்ட பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் சுமார் 15 ஆசிரியர்களின் பணி நிரந்தரம் செய்யப்படும். அதற்கான சட்ட முன்வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் நான்காம் தேதி நடைபெறும் சட்டசபை கூட்டத்தின்போது இதற்கான ஒப்புதல் பெறப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×