என் மலர்
செய்திகள்

குளச்சல் மீன்பிடி படகு மீது மோதிய பனாமா நாட்டு கப்பல்: கேப்டன்- 2 ஊழியர்கள் கைது
திருவனந்தபுரம்:
குமரி மாவட்டம் குளச்சலை அடுத்த வாணியக்குடியை சேர்ந்த நேவிஸ், எர்ணிஸ் ஆகியோருக்கு சொந்தமாக கார்மல் மாதா என்ற விசை படகு உள்ளது.
இப்படகில் குளச்சல், வாணியக்குடி, மிடாலம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் உள்பட 14 பேர் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கடந்த மாதம் 11-ந் தேதி இவர்கள் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அந்த வழியாக பனாமா நாட்டு சரக்கு கப்பல் ஒன்று வந்தது.
அந்த கப்பல் மீன்பிடி படகு மீது மோதியது. இதில் படகு உடைந்து அதில் இருந்த மீனவர்கள் கடலில் விழுந்தனர். அவர்களில் குளச்சலை சேர்ந்த மீனவர் ஆண்டனி ஜான் (வயது 57) மற்றும் அசாம் வாலிபர்கள் 2 பேர் கடலில் மூழ்கினர்.
படகில் இருந்த மற்றவர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை அந்த வழியாக படகில் வந்தவர்கள் மீட்டு கொச்சி துறைமுகத்தில் சேர்த்தனர். இதற்கிடையே மாயமான குளச்சல் மீனவர் ஆண்டனி ஜான் உள்பட 2 பேர் உடல் பிணமாக மீட்கப்பட்டது. ஒருவரின் உடல் இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லை.
இந்த சம்பவம் பற்றி படகின் உரிமையாளர் மற்றும் மீனவர்கள் கொச்சி கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் செய்தனர். மேலும் இந்திய கடலோர காவல் படையும் கொச்சி கடல் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியது.
இதில் மீன்பிடி படகு மீது சரக்கு கப்பல் மோதி விபத்து ஏற்பட்டதற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்தது.
எனவே பனாமா கப்பல் கேப்டன் கிரேக்க நாட்டை சேர்ந்த ஜார்ஜியானாக்கிஸ் லோயானிஸ், உதவி கேப்டன் கலானோஸ் அத்னாசியஸ் மற்றும் ஊழியர் மியான்மர் நாட்டை சேர்ந்த ஷிவானா ஆகியோரை கடலோர காவல் படையினர் பிடித்தனர்.
பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு கொச்சி துறைமுக பொறுப்பு கழக அனுமதி பெற்று விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் பனாமா கப்பலும் கொச்சி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.