search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ரூ.400 கோடி முறைகேடு புகார்: காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக் வீட்டில் அதிரடி சோதனை
    X

    ரூ.400 கோடி முறைகேடு புகார்: காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக் வீட்டில் அதிரடி சோதனை

    ரூ.400 கோடி முறைகேடு புகார் தொடர்பாக மும்பையில் காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக் வீட்டில் அமலாக்க பிரிவினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
    மும்பை :

    இவர் மூன்று முறை எம்.எல்.ஏ. ஆகவும், முந்தைய காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, அதாவது கடந்த 2004-2008 காலகட்டத்தில் சிவில் சப்ளைத்துறை இணை மந்திரியாகவும் பதவி வகித்திருக்கிறார்.

    முன்னதாக, 2000- 2004-ம் ஆண்டுகளில் மும்பையில் அரசு சார்பில் வீடுகளை கட்டி கொடுக்கும் மகாடா வாரியத்தின் தலைவராகவும் பாபா சித்திக் பதவி வகித்தார்.

    இந்த காலகட்டத்தில் பாந்திராவில் குடிசை சீரமைப்பு திட்டத்தின்கீழ், குடிசை வீடுகளை இடித்து கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் போலி ஆவணங்கள் மூலம் வீடுகள் ஒதுக்கீடு செய்ததாகவும், இதனால் ரூ.400 கோடி வரை முறைகேடு அரங்கேறியதாகவும் கூறி உள்ளூர் போலீசில் கடந்த 2012-ம் ஆண்டு புகார் செய்யப்பட்டது.

    இதன்பேரில், பணமோசடி தடுப்பு பிரிவின்கீழ் பாபா சித்திக், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட பணியை மேற்கொண்ட கட்டுமான அதிபர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேசமயம், தன் மீதான இந்த குற்றச்சாட்டை பாபா சித்திக் திட்டவட்டமாக மறுத்தார்.



    இந்நிலையில், இந்த வழக்கை தற்போது கையில் எடுத்திருக்கும் அமலாக்க பிரிவினர், நேற்று மும்பையில் உள்ள பாபா சித்திக்கின் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் அதிரடி சோதனை நடத்தினர். அத்துடன், அவருடன் தொடர்புடைய கட்டுமான அதிபர், அவரது ரியல் எஸ்டேட் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

    நேற்று ஒரே நாளில் மட்டும் மாநிலத்தில் 7 இடங்களில் அமலாக்க பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். இதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அத்துடன், இந்த முறைகேட்டில் சில முக்கிய பிரமுகர்களின் பினாமி நிறுவனங்களும் ஈடுபட்டிருக்கலாம் என்றும், இது தொடர்பாக மேற்கொண்டு ஆதாரங்களை திரட்டும் பொருட்டு, சோதனை நடத்தப்பட்டு வருவதாக அமலாக்க பிரிவினர் நிருபர்களிடம் கூறினர்.

    பாபா சித்திக்கிற்கு இந்தி திரையுலகினருடன் நெருங்கிய நட்பு உண்டு. இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஏற்பாடு செய்திருந்த பிரமாண்ட இப்தார் விருந்தில் நடிகர்கள் ஷாருக்கானும், சல்மான்கானும் கலந்து கொண்டனர். அதுவரையில் எதிரும், புதிருமாக இருந்த இரண்டு நடிகர்களும், இந்த நிகழ்ச்சியில் ஒருவரையொருவர் ஆரத்தழுவி நலம் விசாரித்தனர். அவர்களது நட்பு மீண்டும் தொடர பாபா சித்திக் மத்தியஸ்தராக செயல்பட்டதாகவும் கூறப்பட்டது.

    முறைகேடு புகாரில் காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் வீட்டில் அமலாக்க பிரிவினர் நடத்திய திடீர் சோதனை, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    Next Story
    ×