என் மலர்
கதம்பம்

அற்புதமான குரலரசி
- இந்தி திரையுலகில் புகழ்பெற்ற முன்னணி இசையமைப்பாளர்கள் அத்தனை பேரின் இசையிலும் வாணி ஜெயராம் குரல் ஒலிக்கத்தவறவேயில்லை.
- சாஸ்திரிய சங்கீத கச்சேரிகளுக்காக அடிக்கடி சென்னை வந்துபோக வேண்டியிருந்ததால் 1974ல் சென்னைக்கே இடம் பெயர்ந்தார் வாணி.
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல், கேள்வியின் நாயகனே போன்ற பாடல்கள், அந்தக்காலத்தின் இசைத்தட்டுகளாக சுழன்று சுழன்று ரெக்கார் பிளேயரின் ஊசிகளையே சுலபத்தில் காலி செய்திருக்கும்.
எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்காக பூமியிலே கடமைகள் உண்டு
அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று
- கவிஞர் கண்ணதாசன் வரிகள் வாணி ஜெயராம் குரலில் நம் காதில் பாயும்போது... மெய்சிலிக்காத தருணங்கள் உண்டா.
இந்திய சினிமாவுக்கு கிடைத்த அரிய பொக்கிஷங்களில் டாப் லிஸ்ட்டில் வருவார் வாணி ஜெயராம்.
வங்கி ஊழியராய் வாழ்க்கையை தொடங்கிய அவரின் ஆரம்பம் வெகுசுவாரஸ்யமானது. மார்ச்,1969. மும்பையில் முதன்முறையாக ஒரு இளம்பெண் இசைக்கச்சேரி செய்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு எதேச்சையாக வருகிறார் வசந்த் தேசாய். 1940களிலும் 50களிலும் பட்டையை கிளப்பிய இசைமேதை.
1959ல் கூன்ஜ் உதி ஷெனாய் என்றொரு படம். நம்மூர் தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி எப்படி என்.பி.என்.சேதுராமன் சகோதரர்களின் நாதஸ்வர இசையை திரையில் தத்ரூபமாக காட்டி இசைக்கலைஞராக வியக்க வைத்தாரோ அதேபோல் ஷெனாய் வாத்திய கலைஞராக ஜுப்ளி ஸ்டார் ராஜேந்திரகுமார் நடித்திருப்பார். மன்னிக்கவும் வாழ்ந்து காட்டியிருப்பார்.
ஏனெனில் படத்திற்காக ஷெனாய் வாசித்தது புகழ்பெற்ற உஸ்தாத் பிஸ்மில்லா கான். பாரத ரத்னா பட்டியலில் இடம்பிடிக்கும் அளவுக்கு இந்தியாவின் அப்படியொரு இசைப்பொக்கிஷம் பிஸ்மில்லா கான். இப்படியெல்லாம் பல வரலாறு கொண்ட கூன்ஜ் உதி ஷெனாய் படத்துக்கு இசையமைத்தவர்தான் வசந்த் தேசாய்.
இப்படிப்பட்டவர்தான் அன்றைய இளம்பெண்ணின் கச்சேரியை கேட்க நேரிட்டது. மனுஷன் ஆடிப்போய்விட்டார்.
குரலா இது என்று வியந்து வியந்து, தான் இசையமைத்த Guddi படத்தில் பாட உடனே வாய்ப்பு கொடுத்தார். அதுவும் எப்படி? படத்தில் இடம் பெற்ற அத்தனை பாடல்களையும் பாடும் அளவுக்கு.
முதல் படத்திலேயே இப்படி சாதனை படைத்த அந்த குரலுக்கு சொந்தக்காரர் வேறு யாருமல்ல, நம்ம இசைமேதை பின்னணி பாடகி வாணி ஜெயராம் அவர்கள்தான்.
லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே என்ற சகோதரிகள் குரல் வளத்தால் சாம்ராஜ்யம் நடத்திவந்த இந்திய திரையுலகை வாணி ஜெயராமின் குரலும் இணையாக தாலாட்ட ஆரம்பித்தது.
இந்தி திரையுலகில் புகழ்பெற்ற முன்னணி இசையமைப்பாளர்கள் அத்தனை பேரின் இசையிலும் வாணி ஜெயராம் குரல் ஒலிக்கத்தவறவேயில்லை.
சாஸ்திரிய சங்கீத கச்சேரிகளுக்காக அடிக்கடி சென்னை வந்துபோக வேண்டியிருந்ததால் 1974ல் சென்னைக்கே இடம் பெயர்ந்தார் வாணி.
இங்கே சுசீலாவும் எஸ்.ஜானகியும் கொடிகட்டிப்பறந்த நேரம். எம்.எஸ்.விஸ்வநாதன் புண்ணியத்தில் தமிழிலும் வாணி வெற்றிக்கொடி ஏற்ற ஆரம்பித்தார்.
மற்றவர்கள் எளிதில் பின்பற்றி பாடமுடியாத அளவுக்கு குரல் வளமும், ஏற்ற இறக்கங்களை காட்டுவதில் அசாத்திய திறமையும் வாய்ப்பது என்பது அபூர்வ ரகம்.
இன்றைக்கும் மேடை கச்சேரிகளில் பாடுபவர்கள், இப்படிப்பட்ட அபூர்வராக குரலை எட்டிப்பிடிக்க கடுமையாக போராடவேண்டி வரும். முகபாவனைகளை எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டு மாற்றி மாற்றி மாற்றினால்தான் வாணியின் பாடலை கொஞ்சமாவது தேற்ற முடியும்.
ஹிந்தி, உருது, மராத்தி, குஜராத்தி, ஒரியா, போஜ்புரி, பெங்காலி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் தமிழ் என நாட்டின் அத்தனை மொழிகளிலும் இசையருவியை பாயவிட்ட அற்புதமான குரலரசி.
- ஏழுமலை வெங்கடேசன்






