என் மலர்
கதம்பம்

மகாளய அமாவாசையின் சிறப்பு
- மகாளயம் என்பது பிதுர்க்கள் பூமியில் நடமாடும் காலமாகும்.
- நாம் அவர்களுக்கு எதுவும் செய்யாவிடில் ஏக்கத்துடன் நம்மை சபித்து விடுவார்கள்.
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படுகின்றது. மகாளய அமாவாசைக்கு முன்பு வரும் 14 நாட்களும் அதாவது ஆவணி மாத பெளர்ணமிக்கு அடுத்த திதியான பிரதமை தொடங்கி அமாவாசைக்கு முந்தய திதியான சதுர்த்தசி திதி வரையிலான காலம் மகாளயம் எனப்படும் .
இக்காலகட்டத்தில் பித்ருக்கள் அனைவரும் எமலோகத்தில் இருந்து கிளம்பி பூமிக்கு வந்து வாசம் செய்வார்கள். மகாளயம் என்பது பிதுர்க்கள் பூமியில் நடமாடும் காலமாகும். இதனால் எமலோகமே காலியாக இருக்கும். இந்த 15 நாட்களும் சிரார்த்தத்திற்குரிய நாட்களாகும்.
சிரார்த்தம் என்பது இறந்தவர்களுக்கு " சிரத்தையுடன் உணவளிப்பது " எனப் பொருள்படும் . பிதுர்க்கள் தமக்கு தமது வாரிசுகள் ஏதாவது தருகிறார்களா என எதிர்பார்ப்பார்கள். நாம் அவர்களுக்கு எதுவும் செய்யாவிடில் ஏக்கத்துடன் நம்மை சபித்து விடுவார்கள். சாபங்களில் பொல்லாதது பித்ரு சாபம் ஆகும் . பிதுர்க்களை ஈடேற்றுவது நமது கடமையாகும் . அவர்களது மனம் குளிர நமது வாழ்வு சிறக்கும் .
இவ்வருடம் மகாளயம் புரட்டாசி மாதம் 13 ( 30/09/23) சனிக்கிழமை அன்று தொடங்குகின்றது. மகாளய அமாவாசையானது புரட்டாசி 27(14/10/23) சனிக்கிழமை அன்று வர விருக்கின்றது.
அமாவாசைக்கு முன்பு வருகின்ற பிரதமை முதலான 14 தேதிகளில் செய்யக்கூடிய சிரார்த்தத்தின் பலன் கீழே தரப்பட்டுள்ளது .
1. பிரதமை - சிரார்த்தம் செய்வதால் தன சம்பத்து உண்டாகும் .
2. துதியை - பொது ஜன லாபம்.
3. திரிதியை - வளர்ச்சி லாபம் .
4.சதுர்த்தி - சத்ருநாசம்.
5. பஞ்சமி - சம்பத்து உண்டாகும்.
6. சஷ்டி - புகழ் உண்டாகும்.
7. சப்தமி - பூமி சேர்க்கை உண்டாகும் .
8. அஷ்டமி - சிறந்த புத்தி உண்டாகும் .
9. நவமி- பெண் சம்பத்து உண்டாகும்
10. தசமி - இஷ்ட சித்தி ( நினைத்தது நடக்கும் )
11. ஏகாதசி - வேத சித்தி உண்டாகும் .
12.துவாதசி - மக்கள் செல்வாக்கு, மேதையாகும் யோகம், வீரம் உண்டாதல். ஆயுள் விருத்தி கிட்டுதல் .
13. திரயோதசி - நலம் பல பயக்கும் .
14. சதுர்த்தசி - எந்திரங்களால் இறந்தவர்களுக்கு இத்திதியில் சிரார்த்தம் செய்வதால் புண்ணியம் பெறுவர்.
பரணி நட்சத்திரத்திலும், அஷ்டமியிலும், கஜச்சாயை என்று சொல்லப்படும் திரயோதசி திதியிலும் சிரார்த்தம் செய்யின் கயாவில் செய்த புண்ணியம் கிட்டும்.
இந்த நாட்களில் ஏதாவது ஒரு நாளில் சிரார்த்தம் செய்ய முடியாவிடில் மகாளய அமாவாசை அன்று கண்டிப்பாக சிரார்த்தம் செய்ய வேண்டும். அப்படியும் செய்யாவிடில் தீபாவளி வரை பித்ருக்கள் தமக்கு ஏதாவது கிடைக்குமா என காத்திருப்பார்கள். தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்து விட்டு அவர்களுக்கு பிடித்தமான பலகாரங்களை வைத்து , புத்தாடையும் வைத்து அவர்களை நினைத்து வழிபட்டால் பூரணமாக ஏற்றுக் கொள்வார்கள் .
அப்படியும் செய்யாவிடில் பித்ருக்கள் ஏமாற்றத்துடனும் ஏக்கத்துடனும் நம்மை சபித்து விட்டு மீண்டும் எமலோகத்திற்கே சென்று விடுவார்கள். பித்ருக்களை ஏமாற்றுவது மிகப் பெரிய பாவமாகும். முடிந்த வரை அவர்களுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும். வரக்கூடிய மகாளயத்தில் பெரியோர்களை நினைத்து அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சிறப்பாகச் செய்து அவர்களின் பரிபூரண ஆசிர் வாதத்தைப் பெறுவோம்.
ஜோதிடகலாமணி கே.ராதாகிருஷ்ணன்






