என் மலர்tooltip icon

    கதம்பம்

    பசிக்கு காத்திருப்போம்...
    X

    பசிக்கு காத்திருப்போம்...

    • நமது உடலில் தீவிரமான கழிவு நீக்கம் நடைபெறும் நிலையில் பசி இருக்காது...
    • நமது உடலில் தீவிரமான குணமாக்கும் நடவடிக்கை நடைபெறும் சூழலில் பசி இருக்காது...

    எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு....

    ஆமாம்..! பசி என்றால் எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியுமா...?!

    நம்மில் நிறைய நபர்களுக்குப் பசி உணர்வு எப்படி இருக்கும் என்றே தெரியாது என்பது ஆச்சரியம் அளிக்கும் உண்மை...

    "நேரத்துக்குச் சாப்பிடலன்னா ....

    எனக்குத் தலை வலிக்கும் ...

    தலை சுத்தும் ...

    உணவுக்குழாய் எரியும் ...

    வயிறு வலிக்கும் ...

    கை, கால்கள் நடுங்கத் துவங்கும் ...

    பயங்கரமாக் கோபம் வரும் ...

    ஆனா சாப்பிட்ட உடனேயே இது எல்லாமே சரியாகிவிடும்.. அதனால டைமுக்கு சாப்பிட்டுருவேன் ...."

    என்று பலர் சொல்லக் கேட்டிருப்போம் ...

    ஆனால் இது எதுவுமே பசியல்ல என்பதே உண்மை ...

    எப்பொழுதெல்லாம் நமது வயிறு செரிமானத்திற்கு வேலையின்றி காலியாக இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் நமது உடலிற்குள் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தவும், பழுதுகளை நீக்கவுமான நடவடிக்கைகளை நமது உயிராற்றல் மேற்கொள்கிறது...

    மேலே குறிப்பிடப்பட்டுள்ள, பசி என்று நாம் புரிந்துகொண்டுள்ள தலைவலி, தலை சுற்றல், உணவுக் குழாய் எரிச்சல், வயிற்று வலி, கோபம் இவை அனைத்துமே உடலின் கழிவு நீக்க நடவடிக்கையே ...

    உண்மையிலேயே இந்தத் தொந்தரவுகள் எல்லாமே சாப்பிட்ட உடனேயே சரியாகிவிடும்..!

    எப்படிச் சரியாகின்றது..? அப்படி என்னதான் நடக்கிறது நமது உடலில்...?

    நமது வயிறு காலியாக உள்ள நிலையில், நாம் காலம் காலமாக நமது உடலுக்குள் தேக்கி வைத்துள்ள குப்பைகளைப் பெருக்கி சுத்தப்படுத்தும் வேலையை நமது உயிராற்றல் துவக்கும் பொழுது நாம் சில தொந்தரவுகளை உணர்கிறோம்...

    இதனைப் பசியென்று நினைத்து நாம் சாப்பிடும்பொழுது வேறு வழியின்றி, தான் பார்த்துக்கொண்டிருந்த சுத்தப்படுத்தும் வேலையைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு, நாம் சாப்பிட்ட உணவைச் செரிக்கும் பணிக்கு நமது உயிராற்றல் திரும்பி விடுவதால் (செரிமானம், கழிவுநீக்கம் என அனைத்துப் பணிகளும் உயிராற்றலின் வசமே உள்ளது) தொந்தரவுகள் சரியாகி விடுகின்றன.

    அதாவது கழிவு நீக்கம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது என்று பொருள்...

    இதனை இன்னொரு உதாரணத்தின் வழியாகப் பார்க்கலாம்.... அடுக்குத் தும்மல், இருமலில் சளி வெளியேறுவது போன்ற தொந்தரவுகள் காலையில் எழுந்தவுடனேயே சிலருக்குத் துவங்கும்.. டீயோ, காப்பியோ குடித்தவுடன் இந்தத் தொந்தரவுகள் நின்று விடுவதைக் கவனிக்கலாம்...

    கழிவுத் தேக்கமில்லாத, ஒரு ஆரோக்கியமான உடலில் தலைவலியோ, தலை சுற்றலோ, வயிற்று வலியோ, கை கால் நடுக்கமோ, எரிச்சலோ, கோபமோ இல்லாத "பசி" என்ற மென்மையான உணர்வு மட்டும் உருவாகும்...

    சரி.. எப்போதெல்லாம் நமக்குப் பசி இல்லாமல் போகும்?....

    ஏற்கனவே சாப்பிட்ட உணவின் செரிமானம் முடிவுறாத நிலையில் பசி இருக்காது ...

    நமது உடலில் தீவிரமான கழிவு நீக்கம் நடைபெறும் நிலையில் பசி இருக்காது...

    நமது உடலில் தீவிரமான குணமாக்கும் நடவடிக்கை நடைபெறும் சூழலில் பசி இருக்காது ...

    மனிதனைத் தவிர நம்மைச் சுற்றி வாழும் எந்த உயிரினங்களும் பசியின்றி உணவு உண்பதில்லை...

    நமது வீட்டில் வளரும் நாயும் பூனையும் உடல் நலம் குன்றி இருந்தால் உணவினைத் தவிர்ப்பதைக் காணலாம்...

    சுத்தமாகப் பசியே இல்லாதபோது உணவு ஏதுமின்றி பசிக்காகக் காத்திருப்பதே சிறந்தது...

    சில நிமிடங்களே நீடித்து காணாமல் போகும் லேசான பசிக்குப் பழச்சாறுகள் அல்லது பழங்கள் மட்டுமே போதுமானதாகும் ...

    நல்ல தீவிரமான பசிக்கு சமைத்த விரும்பிய உணவுகள் எடுத்துக் கொள்வது சிறப்பு ...

    உண்பதற்காக நாம் உயிர் வாழ்கிறோமா..

    அல்லது உயிர் வாழ்வதற்காக உண்கிறோமா..?

    நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம்...

    -அக்கு ஹீலர். அ. புனிதவதி

    Next Story
    ×