என் மலர்tooltip icon

    கதம்பம்

    கண்டேன் சாமியை..!
    X

    கண்டேன் சாமியை..!

    • உடல், கருவிகள், உலகம் போன்றவற்றால், உயிர் இச்சைநிலை அடைகிறது.
    • இரண்டையும் தீர்க்க அவனைப் போல நம்மால் முடியாது.

    சாமி மாதிரி வந்து, நல்ல நேரத்தில் உதவி செஞ்சீங்க!

    இப்படி சொல்பவர்கள் முன்பாக, சாமி ஆனது, மனித சட்டை தாங்கி அடிக்கடி வருவதால் தான், அவர்கள் இப்படி சொல்கிறார்கள்! கொடுத்து வைத்தவர்கள் இவர்கள்!

    சாமியோ தவத்தாலும் அறிய முடியாதவன்! சாமிய மாதிரி ஒருத்தரைப் பார்க்கலாம்! சாமியப் பாக்க முடியாது! அவனை உணரலாம்! அவன் தன்மையை உணரலாம்!

    அது என்ன தன்மை?

    சாமியிடம் மிக மிக இயல்பான தன்மை ஒன்று உண்டு! அது உயிர்கள் மீது கருணை கொள்வது!

    நன்றாகச் சிந்தித்தால், உயிர்களின் உருவநிலைக்கு அவன் அளித்த கருணையே காரணம்!

    உயிர்களின் இயக்கநிலைக்கு அவன் கருணையே காரணம்!

    உயிர்களின் ஞானநிலைக்கு அவன் கருணையே காரணம்!

    சாமி இவ்வாறு கருணை செய்வது ஏன்?

    உடல், கருவிகள், உலகம் போன்றவற்றால், உயிர் இச்சைநிலை அடைகிறது!

    இந்த இச்சையையும், உயிரின் வினைக்கேற்பவே சாமி கூட்டி வைக்கிறான்!

    இப்படி உண்டான இச்சையால், உயிர் அடையும் துன்பத்தில் இருந்து விடுபடவே, சாமி உயிர்கள் மீது கருணை கொள்கிறான்!

    உயிர்கள் இரண்டு நிலையில் துன்புறும்! ஒன்று இச்சை! இது மனப் பசி! இரண்டு வயிற்றுப் பசி!

    இது இரண்டையும் தீர்த்து வைப்பவன் சாமியே!

    இரண்டையும் தீர்க்க அவனைப் போல நம்மால் முடியாது! இருப்பினும், வயிற்றுப் பசியை, நம்மால் இயன்ற மட்டும் தீர்க்க முடியும்! இதை மனிதநேயம் என்கிறார் #வள்ளலார்!

    இந்த சீவ காருண்யச் செயலை, அதாவது உயிர்களின் வயிற்றுப் பசியை, சாமியைப் போல் கருணையோடு நீக்கும் எந்த உயிரும் #இறைத்தன்மையை அடையும் என்பது #அப்பர் வாக்கு!

    அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்

    பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை

    என் அன்பு ஆலிக்குமாறு கண்டு இன்புற

    இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே -தேவாரம் 5:01

    பசியை நீக்கும் எவ்வுயிரும் பிறவுயிர்களால் சாமி என்றே அழைக்கப்படும்!

    பசிப்பிணி தீர்க்க வாருங்கள் சாமிகளே! இதற்கு பெயர் பிரசாதம் அல்ல! #அமுதூட்டல் அதாவது அன்னம் பாலித்தல்!

    உணவைப் பரிமாறும் போது, நன்றாகப் பாருங்கள்! அத்திருக் கூட்டத்திலே சாமியும், அடியார்களும் சரிசமமாய் அமர்ந்து இருப்பார்கள்!

    அத்திருக்கூட்டத்தில் கண்டேன் சாமியை!

    -சொக்கலிங்கம் முருகன்

    Next Story
    ×