search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    ஹார்மோன்களின் விளையாட்டு!
    X

    ஹார்மோன்களின் விளையாட்டு!

    • நீங்கள் யார் என்பதை உங்கள் ஹார்மோன்கள் தீர்மானிக்கின்றன.
    • அன்பு செலுத்துவதில் அதன் பங்கும் பெரியது.

    'காதலினால் சாகாமலிருத்தல் கூடும்.

    கவலை போம்...

    அதனாலே மரணம் பொய்யாம்...' என்கிறார் பாரதி.

    மரணத்தையே பொய்யாகச் செய்கிற அந்தக் காதலைத் தூண்டுவது ஒரு ஹார்மோன்.

    காதல் கண்களை மறைக்க, அதில் நீங்கள் கரைந்து உருகவும், காதல் காணாமல் போகும் போது, உயிரை மாய்த்துக் கொள்ளவோ, உயிரை எடுக்கவோ துணியவும் காரணம் காதல் அல்ல... காதலுக்குக் காரணமான ஹார்மோன்.

    ஆமாம்...

    அது மட்டுமல்ல... நீங்கள் யார் என்பதை உங்கள் ஹார்மோன்கள் தீர்மானிக்கின்றன.

    அட... இதென்ன புதுக்கதை?

    ஹார்மோன்கள் என்பவை உடலை இயக்கும் ஒருவித ரசாயனங்கள்தானே... அவை எப்படி நமது ஆளுமையைத் தீர்மானிக்கும் என்கிறீர்களா? அது அப்படித்தான்!

    அமைதி, ஆத்திரம், கோபம், குரூரம், காதல், காமம், பயம், பதற்றம்... இப்படி மனித வாழ்க்கையில் மாறி மாறிக் கிளர்ந்தெழுகிற அத்தனை உணர்ச்சிகளின் பின்னணியிலும் இருப்பவை ஹார்மோன்களின் விளையாட்டே...

    காதலில் ஈடுபடும்போது செரட்டோனின் என்கிற ஹார்மோன் உச்சத்தில் இருக்கும்.


    காதலனோ, காதலியோ பக்கத்தில் இருக்கும் போது, மிதக்கிற மாதிரியான ஒரு உணர்வைப் பெறுவதும் இதனால்தான்.

    ஆக்சிடோசின் என இன்னொரு ஹார்மோன் உண்டு. அன்பு செலுத்துவதில் அதன் பங்கும் பெரியது. ஆனால், இது வெறும் காதலுக்கு மட்டுமின்றி, பாசத்துக்கும் காரணமானது. குறிப்பாக அம்மாவுக்கும் குழந்தைக்குமான நெருக்கத்தின் போது இது ஊற்றெடுக்கும்.

    பிறந்த குழந்தையை அணைத்தபடி தாய்ப்பால் கொடுக்கும் அம்மாவுக்கும், பால் குடிக்கிற குழந்தைக்கும் இந்த ஆக்சிடோசின் அளவு கடந்து சுரக்கும்.

    அதனால்தான் குழந்தைகளுக்கு அம்மா எப்போதும் கொஞ்சம் ஸ்பெஷலாகவே இருக்கிறாள். சுருக்கமாகச் சொன்னால், ஸ்பரிசத்தினால் அதிகமாகிற ஹார்மோன் இது.

    அடிக்கடி தொட்டுக் கொள்ளாத, முத்தமிடாத கணவன் - மனைவியிடையே இந்த ஹார்மோன் சுரப்பு குறைவாகத்தான் இருக்கும்.

    தவிர பெண்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பு அதிகம். அதனால்தான் அவள் எப்போதும் கணவன் என்கிற ஒரே ஆணுடன் மட்டுமே தொடர்பு வைத்துக் கொள்ள விரும்புவாள்.

    பெண்ணை ஒரே ஆணுடன் உறவு கொள்ளச் செய்கிற மாதிரி, ஆணுக்கு பல காதல்களில், உறவுகளில் நாட்டத்தை ஏற்படுத்தவும் டெஸ்ட்டோஸ்டீரான் என்கிற ஹார்மோனே காரணம்.

    இந்த ஹார்மோன் பெண்களுக்கும் இருக்கும். அது அளவு கூடும்போது, அவளுக்கும் பாலியல் ஆர்வம் அதிகரிக்கும் என்கிறது விஞ்ஞானம்.

    டெஸ்ட்ரோஸ்டீரான் அளவு கூடும்போது, அன்புக்கும் அரவணைப்புக்கும் காரணமான ஆக்சிடோசின் அளவை அது குறைத்து விடும்.

    அதனால்தான் ஆண்களால் ஒரு உறவை சுலபமாக முறித்துக் கொண்டு, இன்னொன்றுக்குத் தாவ முடிகிறது.

    ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான டோபமைன் என்கிற ஹார்மோன் சந்தோஷத்துக்குக் காரணமானது. டோப் என்றால் போதை என அர்த்தம்.

    காதலோ, காமமோ எதிலும் ஒருவித போதை நிலைக்குக் கொண்டு போவதில் இந்த ஹார்மோனுக்கு முக்கிய இடமுண்டு. அடுத்தவரின் மேல் ஈர்ப்பையும் உண்டாக்கக் கூடியது.

    பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டிரான் என இரண்டு முக்கியமான ஹார்மோன்கள் இருக்கும்.

    இந்த இரண்டும் அவர்களுக்கு மாதம் முழுக்க ஏறுவதும், இறங்குவதுமாக நிலையற்று இருக்கும்.

    ஈஸ்ட்ரோஜென் என்பதுதான் அவர்கள் பெண்மையை உணரச் செய்வது. ஆணையும் பெண்ணையும் இணைப்பதிலிருந்து, இருவரையும் ஆழமாக நெருங்கச் செய்வது,

    பாலியல் ஆர்வத்தைத் தருவது, பெண்ணுக்கு முடியழகைத் தருவது, அழகான உடல் வளைவைத் தருவது என எல்லாம் ஈஸ்ட்ரோஜெனால் வருவதே.

    ஒரு பெண் மன அழுத்தத்தில் இருக்கும் போது அவளுக்கு இந்த ஹார்மோனின் அளவு குறைவாக இருக்கலாம்.

    மாதவிலக்கான 15 நாட்களுக்குப் பிறகு புரோஜெஸ்டிரான் சுரப்பு குறையும். அந்த நாட்களில் அவர்களுக்கு சரியான தூக்கம் இருக்காது. பாதித் தூக்கத்தில் விழித்துக் கொள்வதும், மறுபடி தூக்கத்துக்குள் போக முடியாமலும் படபடப்புடன் இருக்கவெல்லாம் இதுவே காரணம்.

    கார்ட்டிசால் என்கிற ஹார்மோன், அவசர காலத்து நடவடிக்கைகளின் போது ஊற்றெடுக்கக் கூடியது.

    உதாரணத்துக்கு யாருடனாவது சண்டையிடும் போது... ஓட வேண்டியிருக்கையில்... பிரச்னைகளை எதிர்கொள்வதில்... இப்படி உடனடி ஆற்றலுக்கு உதவக் கூடியது இது.


    வாசோப்ரெசின் என்கிற ஹார்மோனை வாஞ்சையானது என்றே சொல்லலாம். ஆண்களுக்குக் காதல் உணர்வைக் கொடுத்து, குடும்பத்தைப் பாதுகாக்கும், காப்பாற்றும் பொறுப்பையும் கொடுக்கக்கூடியது.

    புரோலாக்டின் என இன்னொன்று...

    குழந்தை பெற்ற ஒரு பெண், ஏதோ ஒரு கூட்டத்தில் தன் குழந்தை இல்லாமல் நின்று கொண்டிருப்பாள்.

    வேறு யாருடைய குழந்தையோ பசியால் அழும். அந்த அழுகைச் சத்தம் கேட்டதும், கூட்டத்தில் நிற்கிற அந்தத் தாய்க்கு அவளையும் அறியாமல் பால் சுரந்து, உடைகள் நனையும்.

    இந்த ஹார்மோனின் அளவுகடந்த சுரப்பினால்தான் குழந்தை பெற்ற பெண்களுக்கு இயல்பாகவே செக்ஸ் ஆர்வம் குறையும்.

    இன்னும் இப்படி அட்ரீனலின், எபிநெர்ஃபின், நார்எபிநெஃப்ரைன் என வேறு சில ஹார்மோன்களும் ஆண், பெண் உடலில் உண்டு.

    ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு. சரி... இப்போது எதற்கு ஹார்மோன் புராணம் என்கிறீர்களா? உங்கள் துணையின் நடவடிக்கைகளில் ஏற்படுகிற திடீர் மாற்றங்களின் பின்னணியில் இப்படி சில ஹார்மோன்களின் வேலைகள் கூட காரணமாக இருக்கலாம்.

    உங்கள் உணர்வுகளைப் பிரதிபலிப்பது, எண்ணங்களின் எழுச்சி, துணையுடனான உங்கள் நெருக்கத்தைத் தீர்மானிப்பது என எல்லாவற்றிலும் ஹார்மோன்களின் திருவிளையாடல் இருக்கும்.

    பெண்ணுக்கு மீசை, தாடியை வளரச் செய்வதன் பின்னணியிலும், ஆணுக்கு அதை வளரவிடாமல் செய்வதன் பின்னணியிலும்கூட ஹார்மோன்களே நிற்கின்றன.

    'நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா/ பொம்பிளையா...?' என துணையின் மேல் நெருப்பு வார்த்தைகளைக் கக்குவது சுலபம்.

    அப்படி வசை பாடச் செய்த பிரச்சனையின் பின் மறைந்து நிற்கிற ஹார்மோன் கோளாறுகளைப் பற்றியும் அறிந்து வைத்திருப்பது நலம்.

    தினமும் உங்கள் துணையைக் கட்டி அணையுங்கள். முடிந்தபோதெல்லாம் முத்தமிடுங்கள். 'ஐ லவ் யூ' சொல்லுங்கள்.

    உடனே உங்கள் ஹைபோதலாமஸ் பகுதியிலிருந்து சிக்னல் கிடைத்து, ஆக்சிடோசின் சுரக்கும்.

    அது உங்கள் இருவருக்கும் இடையில் பிணைப்பைக் கூட்டும். ஆறுதலான, இதமான ஒரு உணர்வைத் தரும். காதல் கூடும்.

    - பொன்.தங்கராஜ்

    Next Story
    ×