என் மலர்
கதம்பம்

வாழ்க்கைப் பயணம்
- நாம் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் நமது வாழ்க்கையில் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
- வாழ்க்கைப் பயணம் என்பது எல்லோரும் ஒன்றாக, கும்பலாகப் பயணிக்கக் கூடிய தேசிய நெடுஞ்சாலை பயணமன்று.
நமக்கு வாய்த்துள்ள வாழ்க்கை இறைவன் அளித்த கொடையாகும்.
நீண்ட காலம் வாழ்வதும், நிறைவான வாழ்க்கை வாழ்வதும் கடவுளின் அனுக்கிரகமே ஆகும்.
நாம் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் நமது வாழ்க்கையில் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
வாழ்ந்து மட்டுமே கற்றுக் கொள்ள வேண்டிய விஷயமாக இருக்கிறது நமது வாழ்க்கை.
"எங்கே வாழ்க்கை தொடங்கும்- அது
எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது..
பாதையெலாம் மாறி வரும்
பயணம் முடிந்து விடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்து விடும்."
கவியரசர் கண்ணதாசன் பாடியது போல, வாழ்க்கைப் பயணம் என்பது பெரிய ஆசானாய் இருந்து,பல படிப்பினைகளை, அனுபவங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டே செல்கிறது.
" வல்லான் வகுத்ததே வாய்க்கால்" என்றபடி, நம் வாழ்க்கைப் பயணத்தை இறைவன்தான் நிச்சயிக்கிறான்.
அடுத்த கணம் என்ன நேரும் என்று எதையும் அறுதியிட்டுச் சொல்லக் கூடிய வல்லமை நம்மில் எவரிடமும் இல்லை.
அதை இறைவன் தன் கையில் வைத்திருக்கிறான்.
வாழ்க்கைப் பயணம் என்பது எல்லோரும் ஒன்றாக, கும்பலாகப் பயணிக்கக் கூடிய தேசிய நெடுஞ்சாலை பயணமன்று.
அவரவர் தனித் தனியாகப் பயணிக்க வேண்டிய முன்பின் எவரும் நடந்தறியாத, மனிதனின் காலடிச் சுவடு பதியாத பாதையற்ற பாதையாகும்.
அந்தப் பாதையில் நாம் ஒருபோதும் பயணித்தது கிடையாது.
அவரவருக்கு விதிக்கப்பட்ட அந்த வாழ்க்கையை வாழுவதின் மூலமே கடக்க வேண்டியவர்களாய் உள்ளோம்.
வாழ்க்கை முழுவதும் மறைபொருளாகவே இருக்கிறது.
இதில் எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.
அதனால்தான் அது எப்போதும் வியப்பூட்டுவதாகவும், அதிசயமாகவும், அழகாகவும் இருக்கிறது.
-தென்னம்பட்டு ஏகாம்பரம்






