என் மலர்tooltip icon

    கதம்பம்

    கேது காலம் உண்டா..?
    X

    கேது காலம் உண்டா..?

    • ராகு-கேதுக்களுக்கு ஆட்சி வீடு இல்லை.
    • சூரியனும் சந்திரனும் பன்னிரு ராசிகளை வலமாகச் சுற்றி வரும்போது ராகு- கேது இடமாகச் சுற்றி வரும்.

    ராகு காலம் என்பது போல் கேது காலம் என்று ஏன் இல்லை?

    ராகு காலம் என்று சொல்கிறோம். கேது காலம் என்பது இல்லை என்று சொல்லக் கூடாது. அதனைத்தான் எமகண்டம் என்று சொல்கிறோம்.

    நவகிரகங்கள் ஒன்பதும் நவநாயகர்கள் எனப்படுவர். இதில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்குத்தான் சொந்த வீடு (ஆட்சி) உண்டு. ராகு-கேதுக்களுக்கு ஆட்சி வீடு இல்லை. அதனால்தான் வாரத்தில் ஏழு நாட்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ராகு- கேதுவுக்குக் கிழமைகள் இல்லை. அப்படியென்றால் ராகு- கேது பலமில்லாத கிரகங்களா? அல்ல!

    நவகிரகங்களில் புதனும் அதைவிடச் செவ்வாயும் அதைவிடச் சனியும் அதைவிட குருவும், அதைவிட சுக்கிரனும் அதைவிட சூரியனும் வரிசைப்படி ஒருவரைவிட மற்றவர் பலம் பெற்ற கிரகங்கள். அந்த சூரியனைவிட ராகுவும் ராகுவைவிட கேதுவும் அதிக பலம் பெற்றவர்கள் என்று ஜோதிட சாஸ்திரத்தில் பலத்தை நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.

    ராகு- கேதுவுக்கு தனி நாள், கிழமை ஒதுக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) ராகுவுக்கு பலம் உண்டு. அதுதான் ராகு காலம்! அதே போல கேதுவுக்குப் பொருந்திய காலம் எமகண்டம்.

    ராகுவும் கேதுவும் தனியான கிரகங்கள் இல்லையென்றும் கிரகங்களின் நிழல் என்றும் விண்வெளி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். வான வெளியில் சூரியனுடைய சுழற்சிப் பாதையும் சந்திரனுடைய சுழற்சிப் பாதையும் ஒரு குறிப்பிட்ட எல்லையில் சந்திக்கும். அப்படி வடதிசையில் ஏற்படும் சந்திப்பை ராகு என்றும்; அதே நேரத்தில் அதற்கு நேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் சமசப்தமமாக ஏற்படும் தென்திசைச் சந்திப்பை கேது என்றும் விஞ்ஞானிகள் கூறுவார்கள். இதையே நமது மெய்ஞ்ஞானிகளும் ஜோதிட சாஸ்திர மகான்களும் ராகு- கேதுக்களை சாயா கிரகங்கள் (நிழல் கிரகங்கள்) என்று எழுதி வைத்தார்கள்.

    சூரியனும் சந்திரனும் பன்னிரு ராசிகளை வலமாகச் சுற்றி வரும்போது ராகு- கேது இடமாகச் சுற்றி வரும். அப்போது சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் ஒரே டிகிரியில் சந்திக்கும்போது அமாவாசை! அதே நேரத்தில் அவர்களுடன் ராகு சேரும்போது, அதற்கு ஏழாவது ராசியில் 180-ஆவது டிகிரியில் கேது வரும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அதேபோல் பௌர்ணமியன்று சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் வரும்போது, சூரியனுடன் ராகுவும் சந்திரனுடன் கேதுவும் அதே டிகிரியில் சேரும்போது சந்திர கிரகணம் ஏற்படும்.

    சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் (டிகிரியில்) சந்திப்பு ஏற்படுவதை கிரகணம் என்கிறோம். அப்படிப்பட்ட நேரத்தில் ஏற்படும் இயற்கையின் அற்புதங்களை அளவிட முடியாது. சமுத்திர நீரில் குளிப்பது, தியானத்தில் ஈடுபடுவது, ஜபம் செய்வது -இப்படி ஆன்மிக வழியில் ஈடுபட்டால் ஒவ்வொருவருக்கும் -ஆன்ம பலம் கிடைக்கும். அதனால்தான் ராகு- கேதுவை ஞான காரகன், மோட்ச காரகன் என்றெல்லாம் ஜோதிட சாஸ்திரம் வர்ணிக்கும்.

    -ஆர். குருமூர்த்தி

    Next Story
    ×