search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    உடல் குண்டாக காரணம் என்ன?
    X

    உடல் குண்டாக காரணம் என்ன?

    • பசியெடுக்கும் வயிற்றுக்கு உணவு தேடுவதும்.
    • உணவு சாப்பிடுவதை நிறுத்தி விட்டு எழுந்து விடுகிறோம்.

    மனிதனின் வாழ்க்கைத் தேடலில் முக்கியமானது "உணவு".

    பசியெடுக்கும் வயிற்றுக்கு உணவு தேடுவதும்

    அடுத்த வேளை பசிக்கு உணவை சேமிப்பதும்

    இந்த உணவுக்குத் தேவையான உழைப்பு மற்றும் பொருள் ஈட்டல்..

    இவையே முக்கியமான முதல் விசயங்கள்.

    பசி உணர்வைத் தூண்டும் க்ரெலின் எனும் ஹார்மோன் நமது ஜீரண மண்டலத்தில் சுரக்கப்பட்டு நாம் உணவு சாப்பிடத் துவங்குகிறோம்..

    வயிறு நிரம்பியதும் லெப்டின் எனும் ஹார்மோன் சுரந்து நாம் திருப்தியை அடைகிறோம். உணவு சாப்பிடுவதை நிறுத்தி விட்டு எழுந்து விடுகிறோம். இந்த சுழற்சி தொடர்ந்து மாறி மாறி நடந்து வருகிறது.

    இதற்கிடையே ஒருவர் ஏன் குண்டாகிறார்?

    ஏன் அவருக்கு உடல் பருமன் ஏற்படுகிறது?

    தனது தேவைக்கு அதிகமாக கார்போஹைட்ரேடஸ் எனும் மாவுச்சத்து உணவுகளை உண்பதால் இன்சுலின் எனும் ஹார்மோன் தொடர்ந்து தூண்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

    இதனால் "ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு" போல ரத்தத்தில் தேவைக்கும் மிகுதியான இன்சுலின் பிரவாகமெடுத்து ஓடுகிறது.

    இதனால் இன்சுலின் எதிர்ப்புநிலை (இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்) உருவாகிறது.

    இன்சுலின் எதிர்ப்பு நிலையில் உணவு சாப்பிட்டபின் வேலை செய்ய வேண்டிய லெப்டின் அனுப்பும் திருப்திக்கான சமிக்ஞைகள் சரியாக மூளையைச் சென்று அடையாது. எனவே உணவு சாப்பிட்ட பிறகு திருப்தி ஏற்படாமல் போகும்.

    தொடர்ந்து க்ரெலின் ஆதிக்கம் செலுத்தும். அதை மட்டுப்படுத்தும் லெப்டின் சரியாக வேலை செய்யாது.

    எனவே உடல் பருமனாக இருப்பவர்கள் இன்னும் மேலதிகமாக சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இன்னும் அதிகமாக உடல் எடை கூடுவார்கள். இதுவும் ஒரு சங்கிலி சுழற்ச்சியாகத் தொடர்ந்து 80 கிலோ இருந்த நபரை 120-140 கிலோவாக்கி விடும்.

    சரி.. இந்த சுழற்சியில் இருந்து ஒருவர் எவ்வாறு விடுபடுவது?

    இதற்கு நாம் உணவுகள் மற்றும் அவற்றில் உள்ள சத்துகள் எவ்வாறு நமக்கு திருப்தியை வழங்குகின்றன என்று புரிந்து கொள்வது நல்லது.

    உணவு சாப்பிட்ட பிறகு உடனடியாக திருப்தியை வழங்குவது ஒரு பக்கம் என்றால், உணவு சாப்பிட்டு நீண்ட நேரம் கழித்தும் திருப்தியுடன் வைத்திருப்பது மற்றொரு பக்கம்.

    நாம் உண்ணும் உணவுகளில்

    மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்ஸ்)

    கொழுப்புச் சத்து (ஃபேட்)

    புரதச்சத்து (ப்ரோட்டீன்)

    நார்ச்சத்து (ஃபைபர்)

    ஆகியவை உள்ளன.

    மாவுச்சத்து அடங்கிய தானியங்கள் சார்ந்த உணவு முறை / இனிப்பு சுவை கொண்ட சீனி / சர்க்கரை கலந்த பானங்கள் முதலியவை சாப்பிட்டவுடன் கொஞ்சம் திருப்தியைத் தந்தாலும், சாப்பிட்ட சில மணிநேரங்களில் மீண்டும் அதிகப் பசியைத் தூண்டும்.

    நல்ல கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் சாப்பிட்ட உடனே திருப்தியை குறைவாக வழங்கினாலும் நீண்ட நேர திருப்தியை வழங்கவல்லவை.

    நார்ச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிட்ட உடனே வயிற்றை நிரப்பி திருப்தியை வழங்கினாலும் நீண்ட நேர திருப்தி வழங்குவதில் குறைபாடு கொண்டவை.

    புரதச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிட்ட பிறகு உடனடி மற்றும் நீண்ட நேர திருப்தியை சிறப்பாக வழங்குகிறது.

    நீங்கள் உணவு மூலம் உடனடி மற்றும் நீண்ட நேர திருப்தி அடைய விரும்பினால் உங்களது மூன்று வேளை உணவிலும் மாவுச்சத்தைக் வெகுவாக குறைத்து, புரதச்சத்து உள்ள உணவுகளையும் நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளையும் சேர்த்து வந்தால்..

    அடிக்கடி டீ/காபி, வடை பஜ்ஜி, பர்கர் / கூல்ட்ரிங்க்ஸ் என மனம் கரைகடல் போல அலைபாயாமல் ஆழ்கடல் போல அமைதியாக இருக்கும். உடல் எடையும் குறையத் துவங்கும்.

    -டாக்டர். ஃபரூக் அப்துல்லா

    Next Story
    ×