search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    அதற்கும் முந்தியது..!
    X

    அதற்கும் முந்தியது..!

    • தமிழ் புலவர்கள் வீடுகளில் கிடைக்கும்.
    • சிலப்பதிகாரத்தின் சுவையில் மயங்கிய அந்தப் புலவர் தொடர்ந்து அலைந்து திரிந்து நிறைய நூல்களை உரையுடன் பதிப்பித்தார்.

    கும்பகோணம் உயர்நிலைபள்ளி ஒன்றில் தமிழாசிரியராக பணிபுரிந்து வந்த புலவர் ஒருவரை கும்பகோணம் நகர முன்சீஃப் சேலம் இராமசாமி முதலியார் காண விரும்புவதாக தகவல் வரவே, புலவர் தயங்கியவாறே அவரைக்காணச் சென்றார்.

    "வாரும்! நீர் தமிழில் ஆர்வம் மிக்கவர் என்று கேள்விபட்டுள்ளேன். என்னென்ன படித்துள்ளீர்?" என்றார் முன்சீஃப்.

    "குறவஞ்சி, காவடி சிந்து, உலா கலம்பகம், பிள்ளைத்தமிழ், அம்மானை, அந்தாதி.."

    "அதில்லை ஐயா! இன்னும் முற்காலத்தியது "

    "வில்லிபாரதம், நளவெண்பா, கம்ப இராமாயணம், பெரிய புராணம்.."

    "இல்லை ஐயா.. அதற்கும் முந்தைய காலம்.."

    "நாலாயிர திவ்ய பிரபந்தம், தேவாரம், திருவாசகம், திருமந்திரம்.."

    "அதற்கும் முந்தைய காலத்தியது ?"

    "அதற்கூ..ம் முந்தையதா ? "புலவருக்கு ஆச்சரியம் மேலிடுகிறது. தான் இவ்வளவு கற்றபிறகும் இன்னும் என்ன இருக்கிறது என்று யோசிக்கிறார்.

    "இதுதானையா தமிழ் இலக்கியம்.. இதைப்படித்துப் பாரும்.. எவ்வளவு அற்புதமான இலக்கியம்!" என்று ஒரு ஓலைச்சுவடிக்கட்டை எடுத்து தருகிறார்.

    "இதன் பெயர் சிலப்பதிகாரம்! நிறைய பகுதிகள் விடுபட்டு போயுள்ளன. "

    "அறிவேன் ஐயா! சில பாடல்களை படித்துள்ளேன். முழுமையாக எங்கும் கிடைக்கவில்லையே! "

    "அதற்குதான் உம்மை வருமாறு அழைப்பு விடுத்தேன். சுவடிகள் கிடைக்காமல் எங்கு போய்விடும்? இன்னும் மணிமேகலை என்றும் ஒரு காப்பியம் இருக்கிறது. சைவ மடங்கள், தமிழ் புலவர்கள் வீடுகளில் கிடைக்கும் ஐயா! நீர் இதைத் தேடி பாடபேதம் நீக்கி முழுமையாக பதிப்பிக்க வேண்டும். நீர் சென்னையில் என்னுடைய இல்லத்தில் தங்கிக் கொள்ளலாம். உம்முடைய செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன். இந்தப் பணியை நீர் செய்ய வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்" என்றார்.

    சிலப்பதிகாரத்தின் சுவையில் மயங்கிய அந்தப் புலவர் தொடர்ந்து அலைந்து திரிந்து நிறைய நூல்களை உரையுடன் பதிப்பித்தார்.

    அவர் உரையோடு பிழை திருத்தி பதிப்பித்த நூல்கள்..

    சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம், 12 புராணங்கள், பெருங்கதை, 9 உலா நூல்கள், 6 தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள், 4 அந்தாதி நூல்கள், 2 பரணி நூல்கள், 2 மும்மணிக்கோவை நூல்கள், 2 இரட்டைமணிமாலை நூல்கள், அங்கயற்கண்ணி மாலை, இதர சிற்றிலக்கியங்கள் 4. அந்த புலவர்தான் உவே.சா எனப்படும் உ.வே. சாமிநாதைய்யர். அவரோடு சி.வை.தாமோதரம் பிள்ளை, திருக்குறளை பதிப்பித்த அயோத்திதாச பண்டிதரின் தாத்தா கந்தன் பண்டிதர் ஆகியோர் தமிழுலகம் மறக்கக்கூடாத மாமனிதர்கள்.

    -எம்.எஸ். ராஜகோபால்

    Next Story
    ×