search icon
என் மலர்tooltip icon

  கதம்பம்

  எம்.ஆர். ராதாவின் சாமர்த்தியம்
  X

  எம்.ஆர். ராதாவின் சாமர்த்தியம்

  • டிராமா குரூப்போடு நான் அந்த வழியாக வேன்ல வந்துகிட்டிருந்தேன்.
  • மறுநாள் காலையில் வந்து பார்த்தா, என் வீட்டு வாசலில் பிளைமவுத் கார் வந்து நிக்குது.

  பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்காமல் பாய்ஸ் கம்பனியில் சேர்ந்து நடிகனாக, கார் டிரைவராக, மெக்கானிக்காக, எலக்டிரீஷியனாக வளர்ந்த எம்.ஆர். ராதாவை பல தொழிலதிபர்கள் பாராட்டியுள்ளனர். அதில் ஒரு நிகழ்ச்சி...

  கேள்வி : டி.வி.சுந்தரம் அய்யங்கார் ஒருமுறை உங்கள் மெக்கானிசத்தைப் பார்த்து...?

  "அதுவா?...அதைச் சொல்லுவதற்கு முந்தி அவருக்கும் எனக்கும் எப்படித் தொடர்பு ஏற்பட்டது என்பதை நான் சொல்லணும். மதுரையிலே ஜகந்நாத அய்யர் நாடகக் கம்பனி முகாம் போட்டிருந்த சமயம் அது. நான் ஸ்பேர் பார்ட்ஸ் வாங்க அடிக்கடி அய்யங்கார் கடைக்குப் போவேன்."

  கேள்வி : அப்போ அய்யங்கார் ஸ்பேர் பார்ட்ஸ் கடைதான் வைத்திருந்தாரா?

  "ஆமாம். அதுவும் ரொம்பச் சின்னக்கடை. நாலணாவுக்குச் சாமான் வாங்கினால்கூட அவர் மறக்காமல் எனக்கு காலணா கொடுப்பார். இப்படி ஏற்பட்ட தொடர்பு எங்கே வந்து நின்னதுன்னா, பாலாற்றங்கரையில் வந்து நின்னது."

  கேள்வி : பாலாற்றங்கரையிலா?

  "ஆமாம்! அந்த ஆத்துமேலே பாலம் கட்டிக்கிட்டு இருந்த சமயம் அது. டிராமா குரூப்போடு நான் அந்த வழியாக வேன்ல வந்துகிட்டிருந்தேன். ஆத்தைக் கடக்கற இடத்திலே ஒரே கூட்டம். என்னடான்னு பார்த்தா டி.வி.எஸ் லாரி ஒண்ணு ஆத்து மணல்லே சிக்கிக்கிட்டு இருந்தது. அதைத் தூக்கக் கிரேன் நிறுத்தியிருந்தாங்க.

  அந்தப் பக்கம் இருநூறு வண்டி, இந்தப் பக்கம் இருநூறு வண்டி நிக்குது. டிராபிக் ஒரே ஜாம். நான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். பொறுக்க முடியலே. வேனை விட்டுக் கீழே இறங்கினேன். ஆத்துல முழங்கால் வரை தண்ணீர் இருந்தது. இறங்கி நடந்தேன்.

  யாரப்பா அது? இங்கே பாருங்க, லாரி அசையறதாயில்லே! கிரேனும் அதைத் தூக்குறதாயில்லே. இப்படியே இருந்தால் நாங்க எப்போ ஊர் போய்ச் சேர்றது? ஒண்ணு, கிரேனை ஒரு மணி நேரம் ஒரு பக்கம் தள்ளி நிறுத்தி எங்களுக்கு வழி விடுங்க. இல்லேன்னா இந்த லாரியக் கிளப்ப எனக்கு அரை மணி நேரம் அவகாசம் கொடுங்கன்னேன்.

  நான் சொன்னதை ஒருத்தனும் காதிலே போட்டுக்கல்லே. அவனுக பாட்டுக்கு தஸ்புஸ்னு இங்கிலீஷில ஏதோ பேசிக்கொண்டே இருந்தானுங்க. எனக்கு கோபம் வந்து, 'என்னடா சொல்றதைக் கேட்காம, தஸ்புஸ்சின்னு பேசிறீங்களேன்னேன். அப்போதான் நான் யாருன்னு அவரகளுக்குத் தெரிஞ்சது. அதுக்குள்ள என்னைச் சுற்றி ஒரு கூட்டமும் சேர்ந்தது. நான் மறுபடியும் விஷயத்தைச் சொன்னேன்.

  கிரேனைத் தள்ளி நிறுத்தறுதுக்கில்லே, 'உங்களுக்கு வேணும்னா லாரியக் கிளப்ப அரைமணி நேரம் அவகாசம் கொடுக்கிறோம்னு' கொஞ்சம் கேலியாச் சொன்னானுக.

  கெடக்கிறானுகன்னு நான் வேனைக் கொண்டு வரச்சொல்லி அதிலே இருந்த கம்பெனி ஆட்களை எல்லாம் கீழே இறங்கச் சொன்னேன். டி.வி.எஸ்.லாரியை அன்லோடு ஆக்குறதுக்காக அதிலிருந்த சரக்கை எல்லாம் இறக்கி என வேன்லே போடச் சொன்னேன். இப்போ என்ன ஆச்சு? லாரி லைட்டாச்சு. வேன் வெயிட்டாச்சு. லைட்டை இந்த வெயிட்டாலே கட்டி இழுக்கச் சொன்னேன். விஷயம் முடிஞ்சது. கிரேன் இல்லாம லாரி கிளம்பிடுச்சு.

  ஆஹான்னான் ஒருத்தன். நல்ல மெக்கானிக்கல் பிரெயினுன்னான் இன்னொருத்தன். ஊருக்கு வந்து சேர்ந்தோம். மறுநாள் காலையில் வந்து பார்த்தா, என் வீட்டு வாசலில் பிளைமவுத் கார் வந்து நிக்குது.

  என்ன விஷயம்?

  சுந்தரம் அய்யங்கார் அனுப்பினார்னு சொன்னானுக. எங்கிட்ட இதுக்குப் பணம் ஏதென்னு கேட்டேன். உங்களுக்கு எப்போ சௌகரியமோ அப்போ கொடுங்கன்னு அய்யங்கார் சொன்னதாகச் சொன்னாங்க.ஐநூறும் ஆயிரம்னு அந்தக் கடனை அடைச்சேன்.

  (விந்தன் எழுதிய 'சிறைச்சாலை சிந்தனைகள்' என்ற நூலில் இருந்து..)

  Next Story
  ×