என் மலர்
கதம்பம்

அற்புதம் நிகழ்த்திய ஆறெழுத்து
- நான் ஒரு திருமணத்தை நடத்தி வைத்தேன். மூன்று மாதங்கள் கழித்து அந்த மாப்பிள்ளையிடமிருந்து ஒரு கடிதம் எனக்கு வந்தது.
- ஆஹா... இது பிரமாதமான அறிவுரை அய்யா...இப்போது அதைத்தான் கடைப்பிடித்து வருகிறேன்.
ஒரு இலக்கியக் கழகத்தில், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் உரையாற்றியபோது கூறிய நகைச்சுவை சம்பவம்...
நான் ஒரு திருமணத்தை நடத்தி வைத்தேன். மூன்று மாதங்கள் கழித்து அந்த மாப்பிள்ளையிடமிருந்து ஒரு கடிதம் எனக்கு வந்தது. அதில் தன் மனைவி தன்னை மதிப்பதில்லை என்றும், மிகவும் அதிகாரத் தோரணையில் நடந்து கொள்வதாகவும், தன்னால் அவளோடு ஒத்துப்போக முடியவில்லை என்றும், தக்க அறிவுரை தர வேண்டும் என்றும் எழுதிக் கேட்டிருந்தார்.
நான் உடனே எட்டு எழுத்துக்கள் கொண்ட ஓர் அறிவுரையை அவருக்கு எழுதி அனுப்பினேன். அவர் அந்த அறிவுரை வேலை செய்யவில்லை என்று பதில் எழுதி அனுப்பினார்.
நான் உடனே ஏழு எழுத்துக்கள் அடங்கிய ஓர் அறிவுரையை எழுதி அனுப்பினேன். அதுவும் பயனில்லை என்று அவர் மறுமொழி எழுதி அனுப்பினார்.
சரி, வேறு வழியில்லை என கடைசியாக ஆறு எழுத்துக்கள் அடங்கிய ஓர் அறிவுரையை எழுதி அனுப்பினேன்.
"ஆஹா... இது பிரமாதமான அறிவுரை அய்யா...இப்போது அதைத்தான் கடைப்பிடித்து வருகிறேன். இப்போது எங்களிடையே எந்தப் பிரச்சினையும் இல்லை" என்று மகிழ்ச்சியாக அந்த மாப்பிள்ளை பதில் அனுப்பி இருந்தார்.
சரி, அந்த அறிவுரைகள் என்னென்ன என்று அறிந்து கொள்ள ஆவலாய் இருப்பீர்கள்! அந்த எட்டு எழுத்து அறிவுரை என்பது "அரவணைத்துப் போ",
ஏழு எழுத்து அறிவுரை என்பது "அடக்கிக் பார்". இந்த இரண்டும் தான் பயன்படவில்லையே!
மூன்றாவதாய் அனுப்பிய அறிவுரை "அடங்கிப் போ" இதுதான் உள்ளபடியே பிரச்சினையை தீர்த்த அறிவுரை!
- பரதன் வெங்கட்