என் மலர்
கதம்பம்

குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் முறை
- குழந்தை மகிழ்ச்சியாக இருந்தால் தாயும் மகிழ்ச்சியாக இருப்பாள்.
- குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் அன்றி வேறெந்த உணவும் கொடுக்கக்கூடாது.
குழந்தை பிறந்தவுடன் தாய்மார்களுக்கு இருக்கும் முக்கிய கவலை மற்றும் கேள்விகள், தனக்கு தாய்ப்பால் சரியாக சுரக்குமா? சுரக்கிறதா?
பதில் - குழந்தையை ஈன்ற அன்னைகளுக்கு தாய்ப்பால் சரியாக உற்பத்தி ஆகும். மேலும் குழந்தையை ஈன்றவுடனே தாய்ப்பால் ஊற்றெடுத்து சுரக்க ஆரம்பிக்கும். குழந்தை பிறந்தவுடனேயே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் அதற்கு தாய்ப்பால் கிடைக்கச் செய்ய வேண்டும்.
எடுக்க எடுக்க ஊறும் கிணறு போல குழந்தை உறிஞ்சிப் பருகப் பருக தாய்ப்பால் ஊற்றெடுக்கும். எனவே தாய்ப்பால் சரியாக சுரப்பதற்கு குழந்தை வாய் வைத்து உறிஞ்சிப் பருகிக் கொண்டே இருக்க வேண்டும்.
பெரும்பாலும் முறையான நிலைப்படுத்துதல் POSITIONING & ஒட்டுதல் ATTACHMENT இல்லாததால் குழந்தை தாய்ப்பால் பருகுவுதில் சுணக்கம் ஏற்படுகிறது.
குழந்தையை எப்படி அணைத்து வைத்துக்கொள்வது?
இதை positioning என்போம்.
1. குழந்தையின் உடல் நேர் கோட்டில் இருக்குமாறு கைகளைக்கொண்டு தாங்கிப்பிடிக்க வேண்டும்.
2. குழந்தையின் தாடை மார்போடு ஒட்டியிருக்க வேண்டும்.
3. குழந்தையின் மூக்கு மார்பை விட்டும் தள்ளியிருக்க வேண்டும்.
4. குழந்தையின் உடல் முழுவதும் தாயின் உடல் பக்கம் பார்த்து இருக்க வேண்டும்.
5. தாய்ப்பால் கொடுக்கையில் தாய் தன் குழந்தையை பார்த்தவாறு இருக்க வேண்டும்.
அடுத்து தாய்ப்பாலை கொடுக்கும்போது தன் குழந்தை மார்போடு வைக்க வேண்டிய ஒட்டுதல் நிலையை Attachment என்போம்.
1. குழந்தை பால் பருகும்போது அதன் கவாய் நன்றாக திறந்து இருக்க வேண்டும்.
2. குழந்தை பால் பருகும் பொழுது தாயின் முளைக்கு மேல் பகுதி மட்டுமே சிறிது தெரியவேண்டும்.
3. குழந்தையின் தாடை பகுதி மார்போடு ஒட்டி அழுத்திக்கொண்டிருக்க வேண்டும்.
தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு பால் புகட்டுகையில் இந்த positioning மற்றும் attachment ஐ சரி செய்யுங்கள், பால் நன்றாக சுரக்கும்.
குழந்தை மகிழ்ச்சியாக பால் பருகும்.
குழந்தை மகிழ்ச்சியாக இருந்தால் தாயும் மகிழ்ச்சியாக இருப்பாள்.
குழந்தை தாயிடம் இருந்து சரியான அளவில் பால் பருகுவதை அந்த குழந்தை சரியான முறையில் சிறுநீர் கழிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தாய்ப்பாலில் 90% நீர் இருக்கிறது. எனவே வெயில் காலங்களில் கூட சரியான முறையில் தாய்ப்பால் புகட்டினால் போதுமானது.
வெளியில் இருந்து நீர் கூட கொடுக்கத் தேவையில்லை.
சிறுநீர் அடிக்கடி கழிக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் சரியான அளவில் கிடைக்கிறது என்றே அர்த்தம்.
குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் அன்றி வேறெந்த உணவும் கொடுக்கக்கூடாது. ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே முழு உணவாக வழங்க வேண்டும்.
- டாக்டர் பரூக் அப்துல்லா






