search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    வர வர மாமியார்...
    X

    'வர வர மாமியார்...'

    • “வர வர மாமியாரு கழுதை போல ஆனாளாம்...” பழமொழியில் கழுதை என்பது கயிதை என வரவேண்டும்.
    • ஊமத்தம்பூ இயல்பு மாறி துன்புறுத்துவது போல் மாமியார்கள் மருமகள்களிடம் ஆரம்பகாலத்தில் அன்பாய் இருப்பார்கள்.

    "வர வர மாமியாரு கழுதை போல ஆனாளாம்"

    நிறைய பேர் இந்த பழமொழியை கேட்டிருக்க கூடும்.. அல்லது சொல்லியிருக்க கூடும்..

    முதன் முதலில் இந்த பழமொழியை கேட்ட அனுபவம் நம்மில் நிறைய பேருக்கு இன்னும் மறக்காமல் இருக்கலாம்.

    நான் முதன் முதலில் இந்த பழமொழியை என்னை நோக்கி சொல்ல கேட்டது பத்தாம் வகுப்பு படிக்கும் போது எனது தமிழ் ஆசிரியர் அவர்களிடமிருந்து..

    எப்போதும் தமிழில் 90க்கும் அதிகமாக மதிப்பெண் எடுக்கும் நான் அரையாண்டு தேர்வில் 63 மதிப்பெண் எடுத்த போது தமிழாசிரியர் "வர வர மாமியார் கழுதையான மாதிரி மார்க்கு கீழே மாற போயிட்டு இருக்கு" என திட்டியது இப்போது மறக்காமல் மனதில் உண்டு.

    அது எப்படி மாமியார் கழுதையாக மாறுவார்கள்..?

    அல்லது மாமியார் கழுதை போல் உதைப்பார்களா?

    அல்லது மாமியார் காள், காள் என கத்துவார்களா.?

    எதனால் இந்த பழமொழியை சொல்கிறோம், இந்த பழமொழியின் அர்த்தம் என்ன என நம்மில் ஒருவரை ஒருவர் கேட்டால் தவறான விளக்கத்தை சொல்வோம்.. அல்லது அர்த்தம் புரியாமலேயே எல்லோரும் சொல்வதால் நாமும் அந்த பழமொழியை சொல்கிறோம் என்ற பதிலை தான் சொல்வோம்.

    உண்மையில் மாமியார் ஒரு போதும் கழுதையாவதில்லை.. பழமொழியை நாம் தவறாக சொல்லி மாமியாரை கழுதையாக்கி சந்தோச பட்டு கொள்கிறோம்.

    அறியாத விளக்கம்: "வர வர மாமியாரு கழுதை போல ஆனாளாம்..." பழமொழியில் கழுதை என்பது கயிதை என வரவேண்டும்.

    தமிழில் கயிதை என்பது ஊமத்தங்காயை குறிக்கும். ஊமத்தங்காயின் பூ அதாவது ஊமத்தம்பூ அதனின் அரும்பு பருவத்தில் மென்மையாய் நீல வண்ணத்தில் சங்குபுஷ்பம் போல் பூத்து மிக அழகாக காட்சியளிக்கும்.

    அழகாய் காட்சியளிக்கும் ஊமத்தம்பூ, காய் பருவத்தை அடையும் போது வெளிப்புறத்தில் கடின முட்களோடு உட்புறத்தில் கொடிய விஷ தன்மையை கொண்டு தனது இயல்பான குணத்தை வெளிப்படுத்தும்.

    பூ பருவத்தில் தன்னை ரசித்தவர்கள் காய் பருவத்தில் தன்னை தொட்டாலோ, உண்டாலோ அவர்களுக்கு துன்பத்தை கொடுக்கும் குணம் கொண்டது ஊமத்தம்பூ.

    ஊமத்தம்பூ இயல்பு மாறி துன்புறுத்துவது போல் மாமியார்கள் மருமகள்களிடம் ஆரம்பகாலத்தில் அன்பாய் இருப்பார்கள்.

    "ஏ! கஸ்தூரியக்கோ... மத்த வீடுகளுக்கு வந்த மருமொவமாரு எப்படியோ எனக்கு தெரியாது.. ஆனா யாம் மருமொவ கெட்டிக்கார புள்ளையாக்கும். எவ்ளோ பாசமா இருக்கா தெரியுமா..

    நேத்து எம்மொவன் எம்மருமவள ஜவுளிக்கடைக்கு கூட்டிட்டு போயிருக்கான். அவளுக்கு எடுத்த மாதிரியே எனக்கும் எடுத்துட்டு வந்துருக்கா. எம்மருமொவளும் எனக்கு மக மாதிரி தான்.." என மருமகளை ஆரம்பத்தில் மாமியார் நன்றாக மெச்சுவார்.

    மாமியார் மெச்சிய மருமகளாய் மருமகள் மெச்சிய மாமியாராய் இருக்கும் உறவில் நாளடைவில் கருத்து வேறுபாடு ஏற்படும்.

    "ஊர் ஒலகத்துல பொண்ணே கெடைக்காம இந்த சில்லாட்டைய போய் எம்மொவனுக்கு கட்டி வைச்சேன் பாரு.. எம்புத்திய சொல்லணும்.." என மாமியார் சொல்வது..

    "ஏழூருக்கு கேக்குற மாதிரி எப்பவும் நய்யி நய்யின்னு பொலம்பிட்டு இருக்குற ஆட்டியமால ஒனக்கு போயி நான் மருமொவளா வந்தேன் பாரு... என்ன சொல்ணும்!"

    என மருமகள் பேசுவது என இருவரின் சம்பாஷணைகள் வம்பாய் வளர்ந்து கடைசியில் வேம்பாய் கசப்பதுபோல் வந்ததால்,

    "வர வர மாமியாரு கழுதை போல ஆனாளாம்" என்ற பழமொழி தோன்றியது.

    போலியாக பழகி நிஜமான தன் குரூர குணத்தை காட்டும் நபர்களுக்காக வர வர மாமியாரு கழுதை போல ஆனாளாம் என்ற பழமொழி பொருந்தும்..

    -சுரேஸ்வரன் அய்யாப்பழம்

    Next Story
    ×