என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் இளைஞர் காங்கிரசார் மறியல்- போக்குவரத்து பாதிப்பு
- குமரி மாவட்டத்தில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
நாகர்கோவில்:
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குமரி மாவட்டத்திலும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு இளைஞர் காங்கிரஸ் சார்பில் இன்று மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் சகாய பிரவீன் தலைமை தாங்கினார். நாகர்கோவில் மாநகர தலைவர் நவீன் குமார் தொடங்கி வைத்தார்.
போலிங் பூத் தலைவர் ராதாகிருஷ்ணன், இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் நரேந்திர தேவ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேற்கு மண்டல தலைவர் சிவ பிரபு, வடக்கு மண்டல தலைவர் செல்வன், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் செல்வ குமார் மற்றும் நிர்வாகிகள் தங்கம், சோனி விதுலா, அலெக்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து மத்திய அரசை கண்டித்தும் பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.