search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போத்தனூரில் தொடர் திருட்டை தடுக்க போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படுமா?
    X

    போத்தனூரில் தொடர் திருட்டை தடுக்க போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படுமா?

    • பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
    • 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது.

    குனியமுத்தூர்,

    போத்தனூர் சாரதா மில் ரோட்டில் ஆட்டுத் தொட்டி பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

    இப்பகுதியில் எதிர் எதிரே இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. அதனால் எந்த நேரமும் குடிமகன்கள் இப்பகுதியில் கும்மாளமிட்டு வருவது வழக்கம். சாலையோரமாக நிறுத்தப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனத்தில் உள்ள பொருட்களை அபேஸ் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டுச் செல்லும் ஹெல்மெட்டுகள் மேலும் வீட்டிற்கு வாங்கி செல்லும் பொருட்கள் ஆகியவை காணாமல் போய் விடும் அவலநிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் அவ்வப்போது அடிதடி ரகளை சம்பவங்களும், கூச்சல் குழப்பங்களும் இப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதியை கடந்து செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் பயந்து கடக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

    ஈச்சனாரியை சேர்ந்த முத்து என்பவர் நேற்று சாரதா மில் ரோட்டில் அமைந்துள்ள அரசன் தியேட்டர் முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு டிக்கெட் விவரம் தெரிந்து கொள்ள உள்ளே சென்றார். இரண்டு நிமிடங்களில் வெளிவருவதற்குள் வாகனத்தில் மாட்டி வைக்கப்பட்டிருந்த பேக் திருட்டு போய்விட்டது.

    ரூபாய் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் அடங்கியிருந்த பேக் திருடு போய்விட்டதால், அதிர்ச்சி அடைந்த அவர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தியேட்டர் வளாகத்தில் அமைந்துள்ள சி.சி.டி.வி. காமிரா மூலம் போலீசார் ஆய்வு செய்து திருடர்களை தேடி வருகின்றனர். இதுமட்டுமன்றி சராசரியாக ஒரு நாளைக்கு 10 -க்கும் மேற்பட்ட ஹெல்மெட்டுகள் காணாமல் போய் வருகிறது.

    சாரதாமில் ரோடு கார்னரில் போலீஸ் புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது. நடந்து செல்லும் தூரத்தில் போத்தனூர் காவல் நிலையமும் உள்ளது. ஆனாலும் இப்பகுதியில் திருட்டு நபர்கள் தங்களது கைவரிசையை காட்டி வருவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட இப்பகுதியில் 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்த வேண்டும். ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

    இதுகுறித்து போத்தனூர் போலீசார் கூறுகையில், 24 மணி நேரமும் சீருடை இல்லாத போலீசார் இப்பகுதியை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை மீறுபவர்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை பின் தொடர்ந்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினர்.

    Next Story
    ×