search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் காகாபாளையம் மேம்பாலம் பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?
    X

    பாலம் பணிகள் மந்தமாக நடப்பதையும், நெருக்கடியில் சிக்கும் வாகனங்களையும் படத்தில் காணலாம்.

    சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் காகாபாளையம் மேம்பாலம் பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

    • சேலம்‌ மாவட்டம்‌, கனககிரி ஊராட்சிக்கு உட்பட்ட காகாபாளையம்‌ பகுதியில்‌ சேலம்‌- கோவை தேசிய நெடுஞ்சாலை உள்ளது.
    • பாலப்‌பணியானது கடந்த ஆண்டு 2022 மார்ச்சுக்குள்‌ முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால்‌ கிட்டதட்ட காலக்கெடு முடிந்து ஒரு ஆண்டு ஆகியும்‌ பாலப்பணி ஆமை வேகத்தில்‌ நடைபெற்று வருகிறது.

    சேலம் மாவட்டம், கனககிரி ஊராட்சிக்கு உட்பட்ட காகாபாளையம் பகுதியில் சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்தும், உயிரிழப்பும் ஏற்பட்டு வந்தது. இது குறித்து பொதுமக்கள் சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டத்திற்கு பின்னர் காகாபாளையம் பகுதியில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க மத்திய அரசின் ஒப்பந்த அடிப்படையில் ரூ.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணி நடைபெற்று வருகிறது.

    இந்த உயர்மட்ட மேம்பாலமானது சேலத்தில் இருந்து 16-வது கிலோ மீட்டரில் செல்லியம்பாளையம் - கனககிரி ஏரி வரை 1 கிலோ மீட்டர் தூரம் வரை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலப்பணியானது கடந்த ஆண்டு 2022 மார்ச்சுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கிட்டதட்ட காலக்கெடு முடிந்து ஒரு ஆண்டு ஆகியும் பாலப்பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த பாலம் பணி நடைபெறும் வழியாக ஈரோடு, கோவை , கொச்சின், கேரளா, உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், ஆம்புலன்சில் செல்லும் நோயாளிகள் மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்பவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. அது மட்டுமல்லாமல் கனரக வாகனங்கள் இவ்வழியே ஊர்ந்து சென்று வருவதால் இவ்விடத்தில் அடிக்கடி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்தும், உயிரிழப்பும் நடைபெற்று வருகிறது.

    பாலம் கட்டுமான பணி நடைபெறும் அருகாமையில் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது . இப்பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் சாலையை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.மேலும் ஏராளமான பள்ளி கல்லூரி வாகனங்கள் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி காலதாமதமாக செல்கின்றன.சேலத்தில் இருந்து மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்சில் கோவை நோக்கி செல்ல இந்த சாலையை பயன்படுத்து வதால் போக்குவரத்து நெரிசல் காரணமாக மிக காலதாமதம் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.

    இது குறித்து நிர்வாக தரப்பில் கூறியதாவது:

    இந்த பாலவேலை ஒரு ஆண்டு காலதாமதமாக காரணம் மண் அள்ளுவதில் கடும் சிக்கல் எழுந்துள்ளது.ஏனெனில் நாங்கள் முறையாக ஆவணம் பெற்று மண் எடுத்தால் தனிநபர் தன் செல்வாக்கை பயன்ப டுத்தி அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பிக்கிறார்.அதிகாரிகள் எங்கள் வாகனங்களை பறிமுதல் செய்துவிடுகின்றனர்.

    இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் மாநில, மத்திய அரசின் டெண்டர் வேலைகளுக்கு தேவையான மண் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    இதனால் பாமரர்கள் முதல் பெரும் ஒப்பந்த நிறுவனங்கள் வரை கடும் சிக்கலில் உள்ளோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை முறைப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுவாக எந்த பணிகள் என்றாலும் குறித்த காலத்தில் நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்பதுதான் அரசின் நோக்கமாக உள்ளது. அதற்கான தடைகளை சரிசெய்து மேம்பாலம் பணியை விரைந்து முடிக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

    Next Story
    ×