search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து நெரிசலை தீர்க்க முக்கோணத்தில் ரவுண்டானா அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
    X

    போக்குவரத்து நெரிசலை தீர்க்க முக்கோணத்தில் ரவுண்டானா அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    • பெதப்பம்பட்டியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • விரைவில் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    உடுமலை :

    பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை மற்றும் உடுமலை - செஞ்சேரிமலை ரோடு சந்திக்கும் நால்ரோடு பெதப்பம்பட்டியில் உள்ளது.குடிமங்கலம் ஒன்றிய அலுவலகம் உட்பட அரசு அலுவலகங்கள், நூற்பாலைகள், கல்வி நிறுவனங்கள், வணிக கடைகள், இப்பகுதியில் அமைந்துள்ளன.பொள்ளாச்சியில் இருந்து பெதப்பம்பட்டிக்கு இயக்கப்படும் பஸ்கள் நால்ரோட்டில் நிறுத்தப்படுகின்றன. அப்போது தாராபுரம் உட்பட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் விலகிச்செல்ல இடம் இருப்பதில்லை. இதே நிலை உடுமலை, செஞ்சேரிமலை, குடிமங்கலம் உட்பட வழித்தட பஸ்கள் நிற்கும் போதும் ஏற்படுகிறது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நால்ரோட்டில் நெரிசலை குறைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அப்போது அங்கிருந்த நிழற்கூரையும் அப்புறப்படுத்தப்பட்டு இடவசதி ஏற்படுத்தப்பட்டது.ஆனால் ஆக்கிரமிப்புகள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் பயணிகள் நிற்பதற்கு இடமில்லை. மழை மற்றும் வெயில் காலங்களில் கடைகளின் முன்புள்ள இடத்தில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.

    அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட கல்வி நிறுவனங்கள் இருப்பதால் நால்ரோட்டில் எப்போதும் மாணவர்கள் கூட்டம் அதிகம் காணப்படும். இவர்கள் பஸ்சுக்காக காத்திருக்க போராட வேண்டியுள்ளது.குடிமங்கலம் ஒன்றியக்குழு சார்பில் சில ஆண்டுகளுக்கு முன், பெதப்பம்பட்டியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த தீர்மானம் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பஸ் நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து கருத்துரு அனுப்ப ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.அதிகாரிகள் தரப்பிலும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நால்ரோட்டில் நெரிசலும், விபத்துகள் தொடர்கதையாக உள்ளது.எனவே நெரிசலை கட்டுப்படுத்த பஸ் நிலையம் அமைப்பதுடன், தற்சமயம் போலீசார் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    முக்கோணம்

    கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை (எண்:209)ல் முக்கோணம் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஆனைமலை ரோடு சேர்கிறது.வாளவாடி, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் உடுமலை மற்றும் பொள்ளாச்சிக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலையில் இணைகின்றன.

    அப்போது பொள்ளாச்சி மற்றும் உடுமலை பகுதியிலிருந்து அதிவேகமாக தேசிய நெடுஞ்சாலையில், வரும் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. இருசக்கர வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முடியாமல் சந்திப்பு பகுதியில் திணறுகின்றன.

    உடுமலை பகுதியிலிருந்து இயக்கப்படும் பஸ்கள், முக்கோணம் பஸ் நிறுத்தத்தில், தேசிய நெடுஞ்சாலையில் இடதுபுறத்திலும், பொள்ளாச்சியிலிருந்து வரும் பஸ்கள் வலது புறத்திலும் நிறுத்தப்படுகின்றன.குறுகலான வளைவு பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் பஸ்கள் நிறுத்தப்படும் போது அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பஸ் நிறுத்தம் அருகில் உள்ள குறுகலான பாலமும் நெரிசலை அதிகரிக்கிறது.இவ்வாறு தேசிய நெடுஞ்சாலையில் பொள்ளாச்சி மற்றும் உடுமலை வரும் வாகனங்களுக்கு முக்கோணம் பகுதி அபாய பகுதியாக மாறியுள்ளது.

    ஆனைமலை வழித்தடத்தில் செல்லும் பஸ்களும், அங்கு நிறுத்தப்படும் போது போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வாக, முக்கோணம் பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    இதனால் ஆனைமலை வழித்தடத்தில் வரும் வாகனங்கள் எளிதாக தேசிய நெடுஞ்சாலையுடன் இணைய முடியும். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களும் வேகத்தை குறைத்து விபத்தை குறைக்க ரவுண்டானா உதவும்.

    இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.தற்போது நான்கு வழிச்சாலைக்கான பணிகளும் அப்பகுதியில் நடப்பதால் சிக்கல் அதிகரித்துள்ளது. விரைவில் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    Next Story
    ×