search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
    X

    சேலத்தில் பெய்த மழையினால் வாகனத்தில் குடைபிடித்தபடி சென்ற மக்கள்.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    • தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்று காலையும் மழை லேசான தூறலுடன் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.
    • இன்றும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்ததால் சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

    சேலம்:

    தென்மேற்கு வங்க கடல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மாண்டஸ் புயலாக வலுவடைந்து, புதுச்சேரி, ஸ்ரீஹரிக் கோட்டாவிற்கு இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    சேலத்தில் சாரல் மழை

    இதன் காரணமாக வருகிற 11-ந் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்று காலையும் மழை லேசான தூறலுடன் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    குறிப்பாக நங்கவள்ளி, தம்மம்பட்டி, ஏற்காடு, காடையாம்பட்டி, சேலம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சாரல் மழையாக பெய்தது.

    பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. இன்றும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்ததால் சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    இதற்கிடையே சேலம் மாவட்டத்தில் மேற்கொள் ளப்பட்டுள்ள முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை குறித்து வருவாய்த்துறை உட்பட பல்வேறு துறை அலுவலர்களுடன் கலெக்டர் கார்மேகம் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    இதன்படி சேலம் மாவட்டத்தில் ஏற்காடு மலைப்பகுதிகள் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பணிபுரியும் அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் தங்கள் பணிபுரியும் இடங்களிலேயே இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. மழையின் போது சாலை ஓரங்களில் மரங்கள் ஏதேனும் சரிந்தால் உடனடியாக அதனை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத் துறை, தீயணைப்புத் துறையினர் அடங்கிய நடமாடும் குழு மர அறுப்பான்கள் எந்திரம் உள்ளிட்ட இதர உபகரணங்களுடன் தயாராக உள்ளனர்.

    மேட்டூர் அணை நீர் தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவை தொடர்ந்து கண்காணித்து உடனுக்குடன் தலைமையிடத்திற்கு அறிக்கை அனுப்பவும், வெளியேற்ற நேர்ந்தால் பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அவசர கால தேவை

    மேலும் தங்கு தடை இன்றி குடிநீர், பால், மருந்து இருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் கனமழை உள்ளிட்ட அனைத்து அவசர கால தேவைகளுக்கும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை பிரிவில் 24 மணி நேரம் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 அல்லது மற்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது .

    பொதுமக்கள் மழை நேரங்களில் அவசிய பணிகள் இன்றி, மற்ற நேரங்களில் வெளியில் செல்வதையும் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்திடவும், அதிக குளிர் இருக்கும் என கருதப்படுவதால் 60 வயதுக்கு மேற்பட்டவர், குழந்தைகளை அவரவர் வீடுகளிலேயே பத்திரமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம் எனவும் கலெக்டர் கூறியுள்ளார்.

    மழையளவு

    சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை கெங்கவல்லியில் அதிக பட்சமாக 13.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தம்மம்பட்டி-6, ஏற்காடு -2.2, காடையாம்பட்டி-2, எடப்பாடி -1.6, சேலம் -1.6, மேட்டூர், சங்ககிரி -1.2, ஆத்தூர், பெரியகோவில், ஆனைமடுவு -1 என, மாவட்டம் முழுவதும் 32 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நாமக்கல்

    இதே போல நாமக்கல் மாவட்டத்திலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக புதுச்சத்திரம், ராசிபுரம், கொல்லிமலை உள்பட பல பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதற்கிடையே நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தில் அதிகபட்சமாக கொல்லிமலையில் 6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. புதுச்சத்திரம் - 5 , ராசிபுரம் - 2.3, திருச்செங்கோடு - 1 என மாவட்டம் முழுவதும் 15.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று காலையும் மழை லேசாக தூறியபடி இருந்தது. இதனால் குளிர்ந்த சீதோசன நிலை நிலவியது.

    Next Story
    ×