search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுராந்தகம் அருகே லாரி கவிழ்ந்ததில் பீர் பாட்டில்கள் உடைந்து ஆறாக ஓடியது- போலீசார் பாதுகாப்பு
    X

    மதுராந்தகம் அருகே லாரி கவிழ்ந்ததில் பீர் பாட்டில்கள் உடைந்து ஆறாக ஓடியது- போலீசார் பாதுகாப்பு

    • வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் பீர் பாட்டில்களை அள்ளிச் சென்றனர்.
    • விபத்தில் லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    மதுராந்தகம்:

    திருவள்ளூரில் இருந்து விழுப்புரம் நோக்கி பீர் பாட்டில் ஏற்றிக்கொண்டு நேற்று நள்ளிரவு லாரி சென்றது. இரவு 12 மணியளவில் மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது.

    இதில் லாரியில் இருந்த பீர்பாட்டில்கள் உடைந்து பீர் ஆறாக ஓடியது. நள்ளிரவு நேரம் என்பதால் லாரியை மீட்டு அதில் இருந்த பீர் பாட்டில் பெட்டிகளை வேறொரு லாரிக்கு மாற்றமுடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் மின்விளக்கு இல்லை. இதைத்தொடர்ந்து மதுராந்தகம் போலீசார் லாரி கவிழ்ந்த இடத்தில் விடிய, விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    எனினும் விபத்து நடந்த சிறிது நேரத்தில் போலீசார் வருவதற்கு முன்பே அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் பீர் பாட்டில்களை அள்ளிச் சென்றனர். அவர்களை போலீசார் எச்சரித்தனர்.

    இதையடுத்து பீர்பாட்டில்களை எடுத்தவர்கள் அங்கேயே ஆங்காங்கே வீசி விட்டு சென்றனர். அந்த பீர் பாட்டில்களை போலீசார் சேகரித்தனர். இந்த விபத்தில் லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    இன்று காலை மீட்பு வாகனம் வந்ததும் லாரி மீட்கப்பட்டது. எனினும் ஏராளமான பீர்பாட்டில்கள் உடைந்து வீணானது. சாலை யோரம் லாரி கவிழ்ந்து கிடந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×